தி.மு.க. ஆட்சியில் தெய்வங்கள் மகிழ்ச்சியாக உள்ளன

ஆன்மிக அரசாக செயல்படுவதால் தி.மு.க. ஆட்சியில் தெய்வங்கள் மகிழ்ச்சியாக உள்ளன என அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

Update: 2023-08-24 18:45 GMT

சீர்காழி:

ஆன்மிக அரசாக செயல்படுவதால் தி.மு.க. ஆட்சியில் தெய்வங்கள் மகிழ்ச்சியாக உள்ளன என அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

அமைச்சர் சேகர்பாபு சாமி தரிசனம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டைநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் சென்று திருநிலை நாயகி சமேத பிரம்மபுரீஸ்வரர், திருஞானசம்பந்தர் உள்ளிட்ட சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் கோவில் வளாகத்தில் பூமிக்கு அடியில் கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகள், ஐம்பொன் சிலைகள், பூஜை பொருட்கள் வைக்கப்பட்ட அறைக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பேட்டி

இதை தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறேன்.

மயிலாடுதுறை மயூரநாதர் கோவில் குடமுழுக்கு விழா 18 ஆண்டுகளுக்கு பின்பு ரூ.9 கோடி செலவில் நடைபெற உள்ளது. இதில் ரூ.2 கோடி இந்து சமய அறநிலையத்துறை சார்பிலும், ரூ.7 கோடி உபயதாரர்கள் சார்பிலும் வழங்கப்பட்டுள்ளது.

918 கோவிகளுக்கு குடமுழுக்கு

இதேபோல் துக்காட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா ரூ.3 கோடியே 60 லட்சம் செலவிலும், உபயதாரர்கள் நிதி உதவியுடனும் வருகிற 3-ந்தேதி நடக்கிறது.தி.மு.க. அரசு பொறுப்பு ஏற்ற கடந்த இரண்டு ஆண்டுகளில் 918 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. இதில் 30 கோவில்களுக்கு மேல் 100 ஆண்டுகளுக்கு பின்னர் குடமுழுக்கு விழா தி.மு.க. ஆட்சியில் தான் நடந்துள்ளது.

தெய்வங்கள் மகிழ்ச்சியான உள்ளன

கடந்த இரண்டு ஆண்டுகளில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான 27 கோவில்களில் 23 கோவில்களுக்கு குடமுழுக்கு நடந்துள்ளது. தி.மு.க. ஆட்சியில் தெய்வங்கள் மகிழ்ச்சியாக உள்ளன. இதுவரையில் தேவாரம் ஓலைச்சுவடியாகவும், நூல்களாகவும் தான் கிடைத்துள்ளன.

ஆனால் முதன்முறையாக சீர்காழி சட்டைநாதர் கோவில் வளாகத்தில் தான் செப்பேடுகள் கிடைக்கப்பட்டுள்ளன. இதில் 110 முழுமையான செப்பேடுகளும், 83 சிதலமடைந்த செப்பேடுகளும், 23 ஐம்பொன் திருமேனி சிலைகளும், 13 பூஜை பொருட்களும் கிடைக்கப்பெற்றுள்ளன.

ஆன்மிக ஆட்சி

செப்பேடுகளை மொழிபெயர்ப்பு செய்ய தொல்லியல் துறை உதவியோடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஒட்டுமொத்தமாக தி.மு.க. ஆட்சி ஆன்மிகவாதிகள், இறையன்பர்கள், மடாதிபதிகள் மகிழ்ச்சியோடு இருக்கும் ஆன்மிக ஆட்சியாக செயல்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது ராமலிங்கம் எம்.பி., பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளிதரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

நினைவு பரிசு

முன்னதாக சீர்காழி சட்டைநாதர் கோவில் சார்பில் கோவில் நிர்வாகி செந்தில் தலைமையில் அமைச்சர் சேகர்பாபுக்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டு சாமி படங்கள் அடங்கிய நினைவு பரிசு வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்