தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு உள்ளது;ஈரோட்டில் அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு உள்ளதாக ஈரோட்டில் அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

Update: 2023-01-29 21:34 GMT

தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு உள்ளதாக ஈரோட்டில் அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

ஆலோசனை கூட்டம்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவு தெரிவித்து தி.மு.க. சார்பில் தேர்தல் பிரசாரம் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக அமைச்சர்கள் சு.முத்துசாமி, கே.என்.நேரு, எ.வ.வேலு, செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் ஈரோட்டில் முகாமிட்டு தேர்தல் பணிகளை செய்து வருகிறார்கள்.

இந்தநிலையில் தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு அமைச்சர் சு.முத்துசாமி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, ராமசந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள். பின்னர் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

சிறந்த வரவேற்பு

தி.மு.க. கூட்டணி சார்பில் தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இனி பொதுக்கூட்டம் அதிகமாக இருக்காது. வீடு, வீடாக சென்று வாக்காளர்களை சந்திப்போம். மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு இருக்கிறது. பி.பி.அக்ரஹாரம் பகுதியில் தேர்தல் பிரசாரம் செய்தபோது மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதை பார்க்க முடிந்தது.

வருகிற 1-ந் தேதி ஈரோட்டில் செயல்வீரர்கள் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பங்கேற்கிறார்கள். 3-ந் தேதி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேட்பு மனுதாக்கல் செய்கிறார். அவர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்துக்காக அவசியம் ஈரோடு வருவார். அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

ஆதரவு அதிகம்

கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசும்போது கூறியதாவது:-

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மக்களிடம் ஆதரவு அதிகமாக இருக்கிறது. தேர்தல் பணியில் கூட்டணி கட்சியினரை பணி செய்ய அழைக்கிறோம். கிழக்கு தொகுதிக்கு உள்பட்ட வார்டுகளில் அமைச்சர்கள் தலைமையில் தி.மு.க.வினர் பணியாற்றி வருகிறார்கள். ஒவ்வொரு அமைச்சர்களுக்கு கீழ் 4, 5 வார்டுகள் பிரித்து வழங்கப்பட்டு உள்ளன. அந்த வார்டுகளின் விவரங்கள் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கப்படும். அங்கு கூட்டணி கட்சிகளின் மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் உள்ளிட்டோர் தங்களது கட்சியினரை அழைத்து சென்று பிரசாரம் மேற்கொள்ள கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் ஈரோடு அ.கணேசமூர்த்தி எம்.பி., காங்கிரஸ் கட்சி மாநகர் பொறுப்பாளர் திருச்செல்வம், மாவட்ட துணைத்தலைவர் ராஜேஷ்ராஜப்பா, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சித்திக் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடர் கழகம் உள்பட பல்வேறு கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்