தி.மு.க. எம்.பி. ஆ.ராசா மீது நடவடிக்கை
இந்துக்கள் குறித்து அவதூறு பேசியதாக, தி.மு.க. எம்.பி. ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜனதா மற்றும் இந்து அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் தனபாலன் தலைமையில், அந்த கட்சியினர் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் தி.மு.க. எம்.பி. ஆ.ராசா மீது போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில், தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், நீலகிரி தொகுதியின் எம்.பி.யுமான ஆ.ராசா பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
அதில் இந்துக்களை பற்றி ஆ.ராசா அவதூறாக பேசி இருக்கிறார். இந்துக்களின் மனதை புண்படுத்தும் நோக்கிலும், மதரீதியாக பகையை தூண்டும் வகையிலும், பொது அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் பேசி இருக்கிறார். அதேபோல் இந்து வழிபாடுகளை கொச்சைப்படுத்தி, அதன்மூலம் இந்துக்களை அவமானப்படுத்த நினைக்கிறார்.
மேலும் உண்மைக்கு புறம்பான வதந்திகளை, மக்களிடம் பரப்பி சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சி செய்கிறார். எனவே ஆ.ராசா எம்.பி. மீது இந்திய தண்டனை சட்டத்தின் 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது. இதேபோல் போலீஸ் நிலையங்களிலும் ஆ.ராசா எம்.பி. மீது பா.ஜனதாவினர் புகார் அளித்தனர்.
போலீசாருடன் வாக்குவாதம்
இதேபோல் கொடைக்கானலில் பா.ஜ.க.வினர் மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், மூஞ்சிக்கல் பகுதியில் இருந்து ஊர்வலமாக வந்து கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில், இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் பேசிய ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அந்த மனுவை போலீசார் வாங்க மறுத்ததால் இந்து அமைப்பினர், பா.ஜ.க.வினர் போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். பின்னர் போலீசார் மனுவை பெற்று கொண்டனர். மேலும் மனு மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகம் முழுவதும் பெரும் போராட்டம் நடைபெறும் என்றும் பா.ஜ.க.வினர் தெரிவித்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பதவியை பறிக்க வேண்டும்
சிவசேனா மாநில அமைப்பாளர் சி.கே.பாலாஜி விடுத்துள்ள அறிக்கையில், தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடனே இந்து மதம், இந்துக்களின் பழக்க வழக்கங்களை கேவலப்படுத்தி பேச தொடங்கி விட்டனர். தற்போது ஆ.ராசா எம்.பி. தான் பொறுப்புள்ள பதவியில் இருப்பதை மறந்து இந்துக்களை அவதூறாக பேசி இருக்கிறார். இதுபோல் அவர் தொடர்ந்து பேசுகிறார். சமூகத்தில் மோதல்களை தூண்டுவதற்கு பேசுவது போன்று இருக்கிறது.
அதற்காக கட்சி தலைமையும் அவரை கண்டிப்பதில்லை. இதுபோன்ற பேச்சுக்களால் விரும்ப தகாத விளைவுகள் ஏற்பட்டால், பேசியவர்களே பொறுப்பாவார்கள். ஒரு எம்.பி. மக்களை கேவலமாக பேசுவது குற்றம் ஆகும். எனவே ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவருடைய எம்.பி. பதவியை பறிக்க வேண்டும், என்று கூறியிருக்கிறார்.