தி.மு.க.வினர் தேர்தலுக்காக பணத்தை வாரி வாரி இரைக்கிறார்கள் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

தி.மு.க.வினர் தேர்தலுக்காக பணத்தை வாரி வாரி இரைக்கிறார்கள் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

Update: 2023-02-22 09:20 GMT

ஈரோடு,

ஈரோட்டில் செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் விடியா அரசு ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் பணத்தை வாரி இரைக்கிறார்கள். வீட்டுக்கு வீடு குக்கர், கொலுசு வழங்கப்படுகிறது. குறுக்கு வழிகளில் தேர்தலை எதிர்நோக்கி வருகிறார்கள். பெண்களுக்கான உரிமை தொகை ஆயிரத்தை தி.மு.க. அரசு இதுவரை வழங்கவில்லை. ஆனால் தேர்தல் வருவதை ஒட்டி அமைச்சர் உதயநிதி இன்னும் ஐந்து மாதத்தில் உரிமை தொகை வழங்கப்படும் என்கிறார் இதை எப்படி நம்புவது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. போலீஸ், ராணுவத்தினர், பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. தி.மு.க.வினர் தேர்தலுக்காக பணத்தை வாரி வாரி இரைக்கிறார்கள். மக்கள் மத்தியில் இரட்டை இலைக்கு வரவேற்பு உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் தி.மு.க.வினர் சர்வதிகாரி போன்று அராஜகத்தை அரங்கேற்றி வருகின்றனர். 150 இடங்களில் பட்டியில் மாடுகளை அடைப்பது போல் மக்களை அடைத்து வைத்துள்ளார்கள். பல கோடி ரூபாய்களை வாரி இரைத்துள்ளனர்.

நாங்கள் தேர்தலில் மக்களை நம்பி தான் நிற்கிறோம். பணத்தை நம்பி நிற்கவில்லை. மு.க. ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளை எதையும் நிறைவேற்றவில்லை. கள்ள ஓட்டு போட்டவரை பிடித்துக் கொடுத்ததற்காக எனக்கு கிடைத்த பரிசு சிறை தண்டனை. இதுதான் இன்றைய தமிழகத்தின் நிலை.

ஓ.பன்னீர்செல்வம் களத்திலேயே இல்லை. அவர் பின்னால் இனிமேல் யாரும் இருக்கமாட்டார்கள். அ.தி.மு.க.விற்கு ஓ பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன் இவர்களை தவிர யார் வந்தாலும் அவர்களை அரவணைத்து ஏற்றுக் கொள்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்