வயது முதிர்ந்த 3 இலங்கைத் தமிழர்களுக்கு விடுதலை வழங்காத தி.மு.க. அரசு: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

திருச்சி முகாமில் தனிமைச் சிறையில் இருந்து அவர்கள் விரும்பும் நாடுகளுக்குச் செல்ல தேவையான நடவடிக்கை எடுக்கவேண்டுமென எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.;

Update:2024-03-02 13:06 IST

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;

தமிழக சிறையில் 32 ஆண்டுகால நீண்ட சிறைவாசம் அனுபவித்த இலங்கைத் தமிழர்கள் ராபர்ட் பயஸ்,  ஜெயகுமார், முருகன்,  சாந்தன் ஆகியோர் 11.11.2022 அன்று உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர். இலங்கை குடிமக்கள் என்பதால் அயல் நாட்டிற்கு அனுப்பும்வரை நடமாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் விதித்து திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், கடந்த மாதம் சிறப்பு முகாமின் இத்தகைய மனிதத் தன்மையற்ற நிர்வாகத்தின் காரணமாக சாந்தன் அவர்களின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து, எழுந்து நிற்கக்கூட முடியாமல் பல நாட்கள் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சாந்தன், கடந்த 28.2.2024 அன்று உடல்நலக் குறைவால் மரணமடைந்துள்ளது, தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இனியாவது, மீதமுள்ள மூன்று பேரின் கோரிக்கைகளை உடனடியாகப் பரிசீலித்து, கண் பார்வை குறைபாடு ஏற்பட்டு தவறான சிகிச்சையில் ஒரு கண்ணில் பார்வையை இழந்த ஜெயகுமார் மற்றும் உடல்நலக் குறைவால் அவதியுறும் இராபர்ட் பயஸ் மற்றும் முருகன் ஆகியோரது கடைசி காலத்தில், எஞ்சிய வாழ்நாளை அவர்களுடைய குடும்பத்தினருடன் வசிப்பதற்கு, திருச்சி முகாமில் தனிமைச் சிறையில் இருந்து அவர்கள் விரும்பும் நாடுகளுக்குச் செல்ல தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, இந்திய வெளியுறவுத் துறையையும், முதல்-அமைச்சரையும் வலியுறுத்துகிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்