தி.மு.க. தேர்தல் அறிக்கை எப்போதும் மக்கள் அறிக்கையாக இருக்கும் - கனிமொழி எம்.பி. பேச்சு

தி.மு.க. தேர்தல் அறிக்கை எப்போதும் மக்கள் அறிக்கையாக இருக்கும் என்று கனிமொழி எம்.பி. கூறினார்.

Update: 2024-02-23 18:48 GMT

வேலூர்,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு சார்பில் வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பொருட்டு கருத்து கேட்பு கூட்டம் வேலூரில் மாநகராட்சி அலுவலக பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.

நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கை எப்போதும் மக்களுடைய தேர்தல் அறிக்கையாக இருக்கும் என்பதற்குத் தான் தலைவர் கருணாநிதி காலம் தொட்டு இன்று நம்முடைய தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதல்- அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொடர்ந்து மக்களைச் சந்தித்து அவர்களுடைய கருத்துக்களைக் கேட்டு, அந்த கருத்துக்களைப் பதிவு செய்து, அதைத் தேர்தல் அறிக்கையை உருவாக்க வேண்டும் என்று தொடர்ந்து கட்டளையிட்டனர்.

அதன்படி, நாங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று, அங்கே இருக்கக்கூடிய விவசாய மக்கள், தொழிலாளிகள், தொழில் அதிபர்கள், தொழில் முனைவோர், மாணவர்கள் என்று பல்வேறு துறைகளைச் சார்ந்த மக்களைச் சந்தித்து அவர்களுடைய கருத்துக்களைக் கேட்டு, தேர்தல் அறிக்கை உருவாக்கக் கூடிய பணியில் ஈடுபட்டு இருக்கின்றோம்.

உங்களுடைய கோரிக்கைகளை, உங்களுடைய கருத்துக்களை, நீங்கள் எங்களுக்குக் கொடுக்கக்கூடிய அறிவுரைகளை, நாங்கள் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு, அதன்பிறகு பரிசீலித்து, நம்முடைய முதல்-அமைச்சரிடமும் கலந்துரையாடி தேர்தல் அறிக்கையை உருவாக்க இருக்கிறோம்.

திராவிட முன்னேற்றக் கழகம் தான் இந்த நாட்டின் தலையெழுத்தை, இந்த நாட்டின் இன்றைய நிலையை மாற்றிக் காட்ட முடியும் என்ற அந்த நம்பிக்கையோடு வந்து இருக்கக்கூடிய உங்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்