தி.மு.க. மாவட்ட செயலாளர் அரசு பணிகளை தொடங்கி வைக்கலாமா? அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் கலெக்டரிடம் மனு
தி.மு.க. மாவட்ட செயலாளர் அரசு பணிகளை தொடங்கி வைக்கலாமா? என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனா்
தமிழக பள்ளிக்கல்வித்துறை முன்னாள் அமைச்சரும், தற்போதைய அ.தி.மு.க.வின கோபி தொகுதி எம்.எல்.ஏ.வுமான கே.ஏ.செங்கோட்டையன், முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சரும், பவானி தொகுதி எம்.எல்.ஏ.வுமான கே.சி.கருப்பணன், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஜெயக்குமார் (பெருந்துறை), ஏ.பண்ணாரி (பவானிசாகர்) ஆகியோர் நேற்று ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கராவை நேரில் சந்தித்து ஒரு புகார் மனுவை வழங்கினார்கள். அந்த மனுவில் கூறி இருந்ததாவது:-
ஈரோடு மாவட்டத்தில் அமைந்து உள்ள கோபிசெட்டிப்பாளையம், பவானி, பெருந்துறை, பவானிசாகர் ஆகிய தொகுதிகளுக்கு நாங்கள் எம்.எல்.ஏ.வாக இருக்கிறோம். எங்கள் தொகுதிகளில் அரசின் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை தி.மு.க.வின் மாவட்ட செயலாளர் பூமி பூஜை செய்தும், திறப்பு விழா நடத்தியும் வருகிறார். அரசு விதிகளின் படி அமைச்சர்கள், நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் மட்டுமே அரசின் திட்டப்பணிகளை திறப்பு விழா மற்றும் பூமிபூஜை செய்ய முடியும். இவ்வாறு இருக்கும்போது எந்த அரசு பதவியிலும் இல்லாத தி.மு.க. கட்சியின் பொறுப்பாளர்கள் எந்த விதியின் அடிப்படையில் அரசின் நலத்திட்ட விழாக்களில் கலந்து கொண்டு திறப்பு விழா மற்றும் பூமிபூஜை செய்து வருகிறார்கள். இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு எங்களுக்கு தெரிவித்தால் நாங்கள் அரசிடம் உரிய விளக்கம் பெற ஏதுவாக இருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.