கவர்னரை திரும்பப் பெற ஜனாதிபதிக்கு தி.மு.க. கூட்டணி மனு - ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கையெழுத்து

அரசியல் சட்டத்திற்கு விரோதமாக கவர்னர் ஆர்.என்.ரவி செயல்படுவதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

Update: 2022-11-02 10:20 GMT

சென்னை,

தமிழ்நாடு கவர்னர் ஆர். என். ரவியை திரும்பப் பெறக் கோரி ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் மனு அளிக்க தி.மு.க. முடிவு செய்துள்ளது. இந்த மனுவில் கையெழுத்திட தி.மு.க. மற்றும் ஒத்த கருத்துடைய எம்.பி.க்களுக்கு தி.மு.க. நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த அழைப்பை ஏற்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இன்று சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு சென்றார். பின்னர் மனுவை படித்துப் பார்த்து அதில் அவர் கையெழுத்திட்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது;-

"கவர்னர் என்பவர் ஜனநாயகம், சமதர்மம், மதச்சார்பின்மை ஆகிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு உதவியாக, அரசியல் சட்டத்தின்படி செயல்பட வேண்டியவர். ஆனால் தற்போது தமிழ்நாட்டில் இருக்கும் கவர்னர் ஆர்.என்.ரவி, இதற்கு விரோதமாக செயல்படுகிறார்.

நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை நிறுத்தி வைப்பதற்கு அவருக்கு அதிகாரம் கிடையாது. தமிழ்நாட்டின் கவர்னராக நீடிப்பதற்கு தார்மீக உரிமையற்றவராக உள்ளார். எனவே அவரை திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என 57 எம்.பிக்கள் கையெழுத்திட்டு ஜனாதிபதிக்கு கோரிக்கை மனு அனுப்புகிறோம்."

இவ்வாறு வைகோ தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்