தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு 1,000-வது கும்பாபிஷேகம்: மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவிலில் கோலாகலமாக நடந்தது

தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு 1,000-வது கும்பாபிஷேகம் 400 ஆண்டுகள் பழமையான காசி விஸ்வநாதர் கோவிலில் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.;

Update:2023-09-11 04:26 IST

சென்னை,

தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தொன்மையான கோவில்கள் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது. 1,000-வது கும்பாபிஷேகம் சென்னை மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவிலில் நடத்த திட்டமிடப்பட்டது.

காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோவிலானது சுமார் 400 ஆண்டுகள் தொன்மையானது. 17-ம் நூற்றாண்டை சேர்ந்தது. இங்குள்ள மூலவர் சுயம்பு வடிவமானவர்.

யாகசாலை பூஜை

சுமார் 4 கோடி ரூபாய் செலவில் கோவிலின் அனைத்து சன்னதிகள் மற்றும் அவற்றுக்கான கோபுரங்கள், 7 நிலைகளுடன் கிழக்குத் திசையில் ராஜகோபுரம், தெற்கு திசையில் 3 நிலைகளுடன் ராஜ கோபுரம், கொடி மரம், நந்தி மண்டபம், வசந்த மண்டபம் புதுப்பிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தையொட்டி காசி விஸ்வநாதர் கோவிலில் கடந்த சில நாட்களாக யாக சாலை பூஜைகள் நடத்தப்பட்டு வந்தது.

நேற்று அதிகாலை 5 மணிக்கு 4-வது கால யாகசாலை பூஜை நடந்தது. கோவில் வளாகம் முழுவதும் வாழை மரங்கள் கட்டப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. பக்தர்கள் வரிசையில் நின்று சிவனை தரிசனம் செய்யும் வகையில் மரக்கட்டைகளால் ஆன பாதைகள் அமைக்கப்பட்டிருந்தது. அதனைத்தொடர்ந்து, காலை 7 மணிக்கு கலச புறப்பாடு நடந்தது.

கும்பாபிஷேகம்

7.15 மணியளவில் அனைத்து வேத மந்திரங்கள் முழங்க கோபுரங்கள் மற்றும் ராஜகோபுரத்திற்கு புனித நீரால் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. புனித நீரை ஊற்றி சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். அப்போது கோவில் வளாகத்தில் கூடியிருந்த திரளான பக்தர்கள் 'ஓம் நமசிவாய' என்று பக்தி முழக்கம் எழுப்பினர். கோபுரங்களில் ஊற்றப்பட்ட புனித நீர் கீழே நின்றிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தை காண வந்த பக்தர்களுக்கு கோவிலில் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் திருக்கல்யாணம், திருவீதி உலா நடந்தது.

சிறப்பு மலர்

அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

தொன்மை வாய்ந்த கோவில்களை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்தார். அந்தவகையில் 400 ஆண்டுகளுக்கு பிறகு திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள், 300 ஆண்டுகளுக்கு பிறகு காஞ்சீபுரம் மாவட்டம், சாத்தனஞ்சேரி கரியமாணிக்க வரதராஜ பெருமாள் ஆகிய கோவில்களுக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.

தற்போது வரை 1,030 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் மகிழ்ச்சியோடு நிறைவடைந்துள்ளது. வெகு விரைவில் இந்த 1,030 கோவில்களின் கும்பாபிஷேக படங்கள் அடங்கிய சிறப்பு மலரை இந்து சமய அறநிலையத்துறை வெளியிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்