தி.க. நடத்திய சனாதன ஒழிப்பு ஊர்வலத்துக்கு எதிர்ப்பு:போராட்டத்தில் ஈடுபட முயன்ற பா.ஜ.க.வினர் 72 பேர் கைது:தேனியில் பரபரப்பு

தேனியில் தி.க.வினர் நடத்திய சனாதன ஒழிப்பு ஊர்வலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்ற பா.ஜ.க.வினர் 72 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-09-17 18:45 GMT

தி.க. ஊர்வலம்

தேனியில் பெரியார் பிறந்தநாளையொட்டி, திராவிடர் கழகம் சார்பில் பல்வேறு அமைப்புகள் பங்கேற்கும் வகையில் 'சனாதன ஒழிப்பு' என்ற பெயரில் ஊர்வலம் நடத்தப் போவதாக அறிவித்தனர். இதற்காக தி.க. மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமையில், தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, எஸ்.டி.பி.ஐ., விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, ஆதித்தமிழர் கட்சி, புரட்சித் தமிழர் கட்சி, ஐக்கிய கம்யூனிஸ்டு கட்சி உள்பட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள ஆட்டோ நிறுத்தம் முன்பு திரண்டனர்.

பா.ஜ.க.வினர் கைது

இதற்கிடையே, பா.ஜ.க. மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் சிலர் பழைய பஸ் நிலையம் அருகில் திரண்டனர். பிரதமர் மோடி பிறந்தநாளை இனிப்பு வழங்கி கொண்டாட உள்ளதாக அவர்கள் கூறினர். அதே நேரத்தில், சனாதனம் ஒழிப்பு என்ற பெயரில் திராவிடர் கழகத்தினர் ஊர்வலம் நடத்தக்கூடாது என்று அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களிடம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் தடையை மீறி போராட முயன்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து மாவட்ட தலைவர் உள்பட 72 பேரை போலீசார் கைது செய்தனர். அதில் சிலரை போலீசார் குண்டுக்கட்டாகவும், சிலரை வலுக்கட்டாயமாகவும் கைது செய்து வேனில் ஏற்றினர். அப்போது பா.ஜ.க.வினர் போலீசாரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். கைது செய்யப்பட்டவர்கள் தேனியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

பரபரப்பு

இதற்கிடையே தி.க. உள்பட பல்வேறு அமைப்பினர் ஆட்டோ நிறுத்தத்தில் இருந்து சிறிது தூரம் சஊர்வலமாக சென்றுவிட்டு, அங்கு வைக்கப்பட்டு இருந்த பெரியார் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தனர். பின்னர், அவர்கள் சனாதன ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அங்கு பதற்றமான சூழல் காணப்பட்டதால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே அங்கு வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டார். இந்த சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே கைதான பா.ஜ.க.வினரை விடுவிக்க கோரி கம்பத்தில் அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது மறியலில் ஈடுபட்ட 19 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்