நெல் ரகங்களின் விதைகள் மானிய விலையில் வினியோகம்

பாரம்பரிய நெல் ரகங்களின் விதைகள் மானிய விலையில் விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்படுவதாக வேளாண் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Update: 2023-09-30 17:40 GMT

பாரம்பரிய நெல் ரகங்கள்

கரூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) கலைச்செல்வி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் 2022-23-ம் ஆண்டு பட்ஜெட் உரையில் அறிவித்தபடி பாரம்பரிய நெல் ரகங்களின் விதை உற்பத்தியினை ஊக்குவிக்கும் பொருட்டு "நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தின்கீழ் நெல் ரகங்கள், தூயமல்லி, மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுணி பாரம்பரிய நெல் ரகங்களின் விதைகள் விவசாயிகளுக்கு மானிய விலையில் வினியோகம் செய்யப்பட உள்ளது. இந்த விதைகளானது 2023-24-ம் நிதியாண்டில் கிலோ ஒன்றிற்கு ரூ.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானிய விலையில்மாவட்டத்தில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் வினியோகம் செய்யப்பட உள்ளது.

10 கிலோ விதை

மொத்த விதை அளவில் 80 சதவீதம் அளவில் பொது பிரிவு விவசாயிகளுக்கும், 20 சதவீதம் பட்டியல் இன, பழங்குடியினர் விவசாயிகளுக்கும் வழங்கப்படும். விவசாயி ஒருவருக்கு ஏக்கர் ஒன்றிற்கு 10 கிலோ விதை மட்டுமே வழங்கப்படும். கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் செயல்படுத்தப்படும் கிராம பஞ்சாயத்தை சார்ந்த விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது. பாரம்பரிய நெல் ரகங்கள் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. உடலிற்கு வலிமை சேர்க்கும் தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. பாரம்பரிய நெல் ரக அரிசியை உண்ணும் போது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. எனவே கரூர் மாவட்டத்தில் பாரம்பரிய நெல் சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் தங்கள் வட்டார வேளாண்மைத்துறை சார்ந்த அலுவலர்கள் அல்லது வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி விதைகளை பெற்று பயன் அடையலாம்.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்