ரேஷன் கடையில் பிளாஸ்டிக் அரிசி வினியோகம்?

வருசநாடு அருகே ரேஷன் கடையில் பிளாஸ்டிக் அரிசி வினியோகம் செய்ததாக பொதுமக்கள் புகார் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-08-16 19:30 GMT

பழுப்பு நிறம்

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே உள்ள கோரையூத்து மற்றும் அதன் சுற்றுவட்டார மலைக்கிராமங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மலைக்கிராம மக்கள் அனைவரும் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியை வாங்கி உணவாக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த பகுதி மக்களுக்கு கோரையூத்து ரேஷன் கடையில் கடந்த 2 மாதங்களாக வழங்கப்பட்ட ரேஷன் அரிசி பழுப்பு நிறத்தில் இருந்துள்ளது. இதனால் பொதுமக்கள் சந்தேகம் அடைந்தனர். மேலும் அந்த பழுப்பு நிற அரிசிகளுக்கு இடையில் வெள்ளை நிறத்திலான அரிசிகள் காணப்பட்டன.

பிளாஸ்டிக் அரிசி

அந்த வெள்ளை நிற அரிசியை பல்லால் கடித்து பார்த்தபோது பல்லில் ஒட்டிக் கொள்வதாகவும், வெள்ளை நிற அரிசியை தண்ணீரில் போட்டால் மிதப்பதாகவும் இருந்தது. இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து தங்களுக்கு வழங்கப்பட்ட ரேஷன் அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலப்படம் செய்யப்படுவதாக புகார் கூறினர்.

இதுகுறித்து மலைக்கிராம மக்களிடம் கேட்டபோது, ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியை நகர்புற மக்கள் கோழி மற்றும் செல்ல பிராணிகளுக்கு உணவாக பயன்படுத்துகின்றனர். ஆனால் மலைக்கிராம மக்களாகிய நாங்கள் ரேஷன் அரிசியை மட்டுமே உணவாக பயன்படுத்தி வருவதால் தங்களுக்கு தரமான அரிசி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதுகுறித்து ரேஷன் கடை பணியாளரிடம் கேட்டபோது, செறிவூட்டப்பட்ட அரிசி என்றும், அதனால் வெள்ளை நிறத்தில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

ரேஷன் கடையில் பிளாஸ்டிக் அரிசி கலந்து வினியோகம் செய்வதாக தகவல் பரவியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  

Tags:    

மேலும் செய்திகள்