மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்ப படிவம் வினியோகம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்ப படிவம் வினியோகம் நடைபெற்றது. இதில் வீடு, வீடாக சென்று 58,453 பேருக்கு பணியாளர்கள் வழங்கினர்.

Update: 2023-07-20 18:53 GMT

மகளிர் உரிமைத்தொகை

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கப்பட உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 1,002 ரேஷன் கடைகளில், 4 லட்சத்து 91 ஆயிரத்து 998 குடும்ப அட்டைகள் உள்ளன. இதில் தகுதிவாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கப்படும். முதல்கட்டமாக புதுக்கோட்டை, ஆலங்குடி, கந்தர்வகோட்டை, அறந்தாங்கி, மணமேல்குடி, இலுப்பூர், பொன்னமராவதி ஆகிய 7 வட்டங்களில் 597 அமைவிடங்களில் 852 முகாம்களில் விண்ணப்பங்கள் பெறும் பணி வருகிற 24-ந் தேதி முதல் அடுத்த மாதம் ஆகஸ்டு 4-ந் தேதி வரை செயல்பட உள்ளது.

அதனைத் தொடர்ந்து 2-ம் கட்டத்தில் திருமயம், கறம்பக்குடி, குளத்தூர், விராலிமலை, ஆவுடையார்கோவில் ஆகிய 5 வட்டங்களில் 415 அமைவிடங்களில் 535 முகாம்களில் விண்ணப்பங்கள் பெறும் பணிகள் அடுத்த மாதம் 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

58,453 பேருக்கு வினியோகம்

மேற்கண்ட படிவங்களை ரேஷன் கடைகள் வாரியாக பிரிக்கப்பட்டு, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத் மற்றும் துணை பதிவாளர் (பொது விநியோகம்) சதீஷ்குமார் மற்றும் ரேஷன் கடை விற்பனையாளர்கள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு விண்ணப்ப படிவம் வீடு, வீடாக வினியோகம் செய்யும் பணி நேற்று முதல் தொடங்கியது. இதில் விண்ணப்பத்தை வினியோகம் செய்யும் போது பெண்கள் ஆர்வத்துடன் விண்ணப்பத்தை பெற்றுக்கொண்டனர்.

முதல் நாளான நேற்று புதுக்கோட்டை, ஆலங்குடி, கந்தர்வக்கோட்டை, அறந்தாங்கி, மணமேல்குடி, இலுப்பூர், பொன்னமராவதி ஆகிய 7 வட்டங்களில் உள்ள 3 லட்சத்து 6 ஆயிரத்து 454 குடும்ப அட்டைதாரர்களில் 58,453 விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டுள்ளது. மீதி உள்ள விண்ணப்பங்களும் வரும் நாட்களில் வழங்கப்படும். மேலும் இந்த திட்டத்தில் பணம் பெற்று தருவதாக யார் கூறினாலும் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அன்னவாசல்

இலுப்பூர் தாலுகா அன்னவாசலில் வட்ட வழங்கல் அலுவலர் துரைராஜ் தலைமையில் வீடு, வீடாக சென்று பணியாளர்கள் பொதுமக்களுக்கு விண்ணப்ப படிவங்களை வினியோகம் செய்தனர். ஒவ்வொரு ரேஷன் கடை பகுதியில் முகாம்கள் நடைபெறும் நாள் மற்றும் நேரம் ஆகியவற்றை குறிப்பிட்டு, ஒவ்வொரு குடும்பத்துக்கும் டோக்கன் மற்றும் விண்ணப்ப படிவம் ஆகியவை வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்