அன்னவாசல் அருகே கோவில் காளைகளை அவிழ்ப்பதில் தகராறு; 3 பேர் மண்டை உடைந்தது

அன்னவாசல் அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டில் கோவில் காளைகளை அவிழ்ப்பதில் ஏற்பட்ட தகராறில் 3 பேர் மண்டை உடைந்தது. மாடுகள் முட்டியதில் 39 பேர் காயமடைந்தனர்.

Update: 2023-04-01 18:30 GMT

ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலை அடுத்த நார்த்தாமலையில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டை நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர். இதையொட்டி மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று நேற்று காலை ஜல்லிக்கட்டு தொடங்கியது. இதனை இலுப்பூர் ஆர்.டி.ஓ. குழந்தைசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதையடுத்து, அன்னவாசல், புதுக்கோட்டை, விராலிமலை, கீரனூர், இலுப்பூர், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை உள்பட பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த 550-க்கும் மேற்பட்ட காளைகளை கால்நடை மருத்துவ குழுவினர் பரிசோதனைக்கு பிறகு வாடிவாசலுக்குள் அனுப்பினர். அதேபோல் 147 மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்த பின்னர் களத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

3 பேர் மண்டை உடைந்தது

வாடிவாசலில் முதல் காளையாக கோவில் காளைகளை அவிழ்த்து விட முடிவு செய்யப்பட்டது. அப்போது நார்த்தாமலை, சத்தியமங்கலம் ஆகிய இரு ஊர் கோவில் காளைகளில் எந்த ஊர் கோவில் காளையை முதலில் அவிழ்ப்பது என்பதில் இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் சுகுமார் (வயது 21), சரவணன் (20), செல்வராஜ் (27) ஆகிய 3 பேரின் மண்டை உடைந்தது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதனைதொடர்ந்து ஒரு தரப்பினர் ஜல்லிக்கட்டு திடலை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் ஜல்லிக்கட்டு நடத்தப்படாமல் இருந்தது. இதனை தொடர்ந்து இருதரப்பினரிடமும் ஆர்.டி.ஓ. குழந்தைசாமி பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், இருதரப்பினரும் சமாதானம் அடைந்ததால் ஜல்லிக்கட்டு காலை 10.15 மணிக்கு தொடங்கியது. பின்னர் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

சீறிப்பாய்ந்த காளைகள்

அதன் பின்னர் பல்வேறு பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் இருந்து ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்த காளைகள் மின்னல் வேகத்தில் சென்றன. சில காளைகள் களத்தில் நின்று தன்னை அடக்க வந்த வீரர்களை அருகில் நெருங்க விடாமல் மிரட்டின. இருப்பினும் பல காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டிப்போட்டு அடக்கினர்.

ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் பிரகாஷ் (20), பாஸ்கர் (21), சங்கர் (47) உள்பட 39 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக முருகேசன் (25), வினோத் (30), சாந்தக்குமார் (20) உள்ளிட்ட 7 பேர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

பரிசுகள்

ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கு வெள்ளிக்காசுகள், பிளாஸ்டிக் சேர், பாத்திரங்கள், ரொக்கம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டியை காண மக்கள் வாகனங்கள், மரங்கள் மீது நின்று வேடிக்கை பார்த்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். ஜல்லிக்கட்டு போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கீரனூர் போலீசார் செய்திருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்