குற்றாலத்தில் 70 லிட்டர் கலப்பட பதநீர் அழிப்பு
குற்றாலத்தில் 70 லிட்டர் கலப்பட பதநீரை உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கொட்டி அழித்தார்.
குற்றாலம்,
குற்றாலத்தில் 70 லிட்டர் கலப்பட பதநீரை உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கொட்டி அழித்தார்.
கலெக்டருக்கு புகார்
குற்றாலத்தில் சீசன் தாமதமாக தொடங்கியது. தற்போது சாரல் மழை இல்லாததால் அருவிகளில் தண்ணீர் மிகவும் குறைவாக விழுகிறது. இருப்பினும் சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வருகிறார்கள்.
தென்காசி மற்றும் குற்றாலம் பகுதிகளில் பதநீர் விற்பனை நடைபெறுவது வழக்கம். தென்காசி மாவட்டத்தில் உள்ள சுரண்டை, சேர்ந்தமரம், அகரகட்டு, கடையாலுருட்டி, வேலப்பநாடானூர் ஆகிய பகுதிகளில் இருந்து பதநீர் வியாபாரிகள் விற்பனை செய்கிறார்கள். இந்த பதநீரில் கலப்படம் இருப்பதாக தென்காசி மாவட்ட கலெக்டருக்கு புகார்கள் வந்தன.
இதனை தொடர்ந்து தென்காசி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நாகசுப்பிரமணியன் பழைய குற்றாலம் பகுதியில் பதநீர் வியாபாரிகளிடம் சோதனை செய்தார். அப்போது அதில் சுண்ணாம்பு மற்றும் சாக்ரீன் போன்ற பொருட்கள் அதிகமாக கலப்படம் செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பதநீர் கொட்டி அழிப்பு
இதனைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்து பதநீரை பறிமுதல் செய்து கீழே கொட்டி அழித்தார். மொத்தம் 70 லிட்டர் அழிக்கப்பட்டது.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
சென்னை உணவு பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவின் பேரிலும் தென்காசி மாவட்ட கலெக்டர் அறிவுரைப்படியும் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ஆலோசனையின் படியும் குற்றாலம் பகுதியில் விற்பனையாகும் பதநீரை சோதனை செய்தேன். பொதுவாக பதநீர் மரத்தில் இருந்து இறக்கி சுமார் 2 மணி நேரத்துக்குள் அதனை உபயோகப்படுத்த வேண்டும். அதன் பிறகு அது கெட்டுவிடும். அது கெடாமல் இருப்பதற்காக சுண்ணாம்பு சேர்ப்பார்கள். மேலும் அதிக இனிப்பிற்காக சாக்ரீன் என்ற பொருளும் சேர்க்கிறார்கள். இது கலப்பட பதநீர் ஆகும். இதனை குடிப்பதால் உடல் நலத்திற்கு கேடு ஏற்படும். எனவே அதனை பறிமுதல் செய்து அழித்தோம். தொடர்ந்து இந்த சோதனை நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.