சத்துணவு பெண் அமைப்பாளர் பணியிடை நீக்கம்

உணவில் பூச்சி கிடந்த சம்பவத்தை தொடர்ந்து சத்துணவு பெண் அமைப்பாளரை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டு உள்ளார்.

Update: 2022-09-04 19:44 GMT

உணவில் பூச்சி கிடந்த சம்பவத்தை தொடர்ந்து சத்துணவு பெண் அமைப்பாளரை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டு உள்ளார்.

சத்துணவில் அட்டை பூச்சி

சேலம் மாவட்டம் வேம்படிதாளம் அருகே உள்ள திருவளிப்பட்டியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் மதிய வேளையில் மாணவ, மாணவிகளுக்கு சத்துணவு வழங்கப்படுகிறது.

அதன்படி கடந்த ஆகஸ்டு மாதம் 23-ந்தேதி வழங்கிய சத்துணவில் அட்டை பூச்சி கிடந்து உள்ளது. இது குறித்து மாணவர்கள் ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். இருப்பினும் அவர்கள் அட்டை பூச்சியை எடுத்து விட்டு அதே உணவை வழங்கி உள்ளனர். அந்த உணவை சாப்பிட்ட பல மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

பணியிடை நீக்கம்

இதில் ஆத்திரம் அடைந்த மாணவ, மாணவிகளின் பெற்றோர் அட்டை பூச்சி கிடந்த உணவு வழங்கியதால் தான் குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு உள்ளது என்று கூறி பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து வீரபாண்டி வட்டார கல்வி அலுவலர் அன்பழகன் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

பின்னர் பள்ளி தலைமை ஆசிரியை கலைச்செல்வி, சத்துணவு அமைப்பாளர் விமலாதேவி (வயது 58), சமையலர் ஜெயந்தி ஆகியோரிடம் நேரில் விசாரணை நடத்தினார். பின்னர் இந்த விசாரணை அறிக்கையை அவர் கலெக்டர் கார்மேகத்திடம் வழங்கினார்.

இந்த நிலையில் சத்துணவு அமைப்பாளர் விமலாதேவியை பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்