ஊராட்சி மன்ற தலைவி பதவி நீக்கம்

போலி பில் தயாரித்து மோசடி செய்ததாக கோட்டைமேடு பெண் ஊராட்சி மன்ற தலைவி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2022-06-06 20:36 GMT

மதுரை

போலி பில் தயாரித்து மோசடி செய்ததாக கோட்டைமேடு பெண் ஊராட்சி மன்ற தலைவி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வழக்கு

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியத்தில் உள்ளது கோட்டை மேடு ஊராட்சி. இந்த ஊராட்சி மன்ற தலைவி சர்மிளா ஜி மோகன் என்பவர் இருந்துவந்தார். இவர் பதவியேற்கும் போது இந்த ஊராட்சியில் சுமார் ரூ.25 லட்சம் நிதி வரை இருந்தது. இந்த நிதியில் போலி பில்கள் தயாரித்து ரூ.18 லட்சம் எடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து அந்த கிராமத்தின் 6-வது வார்டு கவுன்சிலர் சுரேஷ், கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த கிராம சபை கூட்டத்தில் கேள்வி எழுப்பினார். ஆனால் இதுகுறித்து அவருக்கு முறையான பதில் தரவில்லை. எனவே அவர் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் வரவு-செலவு கணக்குகளை பெற்றார்.

பின்னர் சுரேஷ் இதுகுறித்து கலெக்டரிடம் புகார் செய்தார். ஆனால் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனைத்தொடர்ந்து சுரேஷ், கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கின் முடிவில் கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோர்ட்டு உத்தரவிடப்பட்டது. அதன்பின் கலெக்டர், வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தினார்.

ரூ.10 லட்சம்

அதன்படி இந்த குழுவினர் விசாரணை செய்ததில் சுமார் ரூ.10 லட்சம் நிதி போலி பில் மூலம் கையாடல் செய்து இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த அறிக்கை கலெக்டரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அவர் இதனை கோர்ட்டில் தாக்கல் செய்தார். இதன் தொடர்ச்சியாக கலெக்டர் அனிஷ்சேகர், கோட்டை மேடு ஊராட்சி மன்ற தலைவர் பதவியில் இருந்து சர்மிளா ஜி மோகனை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

ஊராட்சி மன்ற தலைவி பதவி நீக்கம் செய்யப்படும் சூழ்நிலையில், ஊராட்சி மன்ற துணை தலைவராக இருப்பவர், தலைவராக பொறுப்பேற்பார் என தெரிகிறது.

Tags:    

மேலும் செய்திகள்