மோசடி வழக்கில் நிதி நிறுவன இயக்குனர்களின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

நிதிநிறுவன மோசடி வழக்கில் அதன் இயக்குனர்களின் முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2023-08-22 20:17 GMT


நிதிநிறுவன மோசடி வழக்கில் அதன் இயக்குனர்களின் முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

நிதி நிறுவனம்

மதுரையை தலைமையகமாக கொண்டு நியோமேக்ஸ் பிராபர்ட்டீஸ் என்ற தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தின் இயக்குனர்களாக பா.ஜ.க. பிரமுகர் வீரசக்தி, கமலக்கண்ணன் மற்றும் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் உள்ளனர். இவர்கள் தங்களது நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதம் 12 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வட்டி கிடைக்கும் என்றும், 3 வருடங்களில் முதலீட்டு தொகை இரட்டிப்பாகி தரப்படும் என்றும் ஆசை வார்த்தை கூறி பொதுமக்களிடம் இருந்து பணம் பெற்றுள்ளனர்.

இதனை நம்பி ரூ.10 லட்சம் முதல் பலகோடி ரூபாய் வரை பொதுமக்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தனர். ஆனால் தெரிவித்தபடி யாருக்கும் வட்டி தராமல் ஏமாற்றினர். தொடர்ந்து இந்த நிறுவனம் மற்றும் அதன் இயக்குனர்கள் மீது மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் தரப்பில் புகார் மனு கொடுக்கப்பட்டது.

முன்ஜாமீன்

அதனடிப்படையில் நிறுவனத்தை சேர்ந்த 17 பேர் மீது இந்திய தண்டனை சட்டம், ஒப்பந்த சட்டம் ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிலரை கைது செய்தனர். இந்த நிலையில், நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தின் இயக்குனர்களான பாலசுப்பிரமணியன், பழனிசாமி, அசோக்மேத்தா, சார்லஸ் கிளைமேக்ஸ், தியாகராஜன், கமலக்கண்ணன், நாராயணசாமி, மணிவண்ணன் ஆகியோர் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்க கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வக்கீல் ஆஜராகி, இந்த வழக்கில் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. இந்நிறுவனம் வெளிநாடுகளில் நிறைய முதலீடுகளை செய்துள்ளது.

தள்ளுபடி

அதற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளன. எனவே இவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் மட்டுமே முதலீடு செய்த மக்களின் பணத்தை மீட்க வாய்ப்புள்ளது. எனவே, அவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அரசு வக்கீலின் வாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணை ஆரம்பகட்ட நிலையில் இருப்பதால் இந்த வழக்கு தொடர்பான அனைவரின் முன்ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்