ஸ்ரீமதி மரணம்: பலவந்தம் செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன - வழக்கறிஞர் குற்றச்சாட்டு

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் முதல் மற்றும் 2 வது பிரேத பரிசோதனை முடிவுகள் வேறுபாடு உள்ளதாக மாணவி தரப்பு வழக்கறிஞர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

Update: 2022-08-24 18:10 GMT

கள்ளக்குறிச்சி:

கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்த பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி (வயது 17). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்தார்.

கடந்த மாதம் 13-ந்தேதி விடுதியில் இருந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார். பள்ளி நிர்வாகத்தினர், மாணவி ஸ்ரீமதி 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர்.

இதற்கிடையே உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் உடல் கடந்த மாதம் 14-ந்தேதி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற தடயவியல் நிபுணர், அரசு டாக்டர்கள் 3 பேர் கொண்ட குழு முன்னிலையில் மாணவியின் உடல் கடந்த மாதம் 19-ந் தேதியன்று மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

அதன் பிறகு 23-ந் தேதியன்று ஸ்ரீமதியின் உடலை அவரது பெற்றோர், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் இருந்து பெற்று சொந்த ஊருக்கு எடுத்துச்சென்று அடக்கம் செய்தனர்.

மேலும் மாணவி ஸ்ரீமதியின் 2 பிரேத பரிசோதனை முடிவுகளையும் ஆய்வு செய்ய புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் 3 பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்தும், இந்த குழுவினர் மாணவியின் பிரேத பரிசோதனை முடிவுகளை ஆய்வு செய்து ஒரு மாதத்திற்குள் தங்கள் ஆய்வறிக்கையை, மூடி முத்திரையிட்ட உறையில் விழுப்புரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்நிலையில் ஜிப்மர் மருத்துவ குழுவினர் விழுப்புரம் நீதிமன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்தனர். 

இந்நிலையில் இது குறித்து மாணவி ஸ்ரீமதி தரப்பு வழக்கறிஞர் காசி விஸ்வநாதன் கூறியதாவது,

ஸ்ரீமதி வழக்கில் முதல் தகவல் அறிக்கை, முதல் மற்றும் 2-வது பிரேத பரிசோதனை, ஜிப்மர் ஆய்வறிக்கை ஆகியவற்றை கேட்டு விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நகல் மனு போட்டு இருந்தோம். சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் இந்த மனுவை தாக்கல் செய்தோம்.

ஏற்கனவே ஐகோர்ட்டு, விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் முடிவு செய்தால் 2 பிரேத பரிசோதனை வீடியோ பதிவுகள் , ஜிப்மர் ஆய்வறிக்கை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்தது. அதன்படி நகல் மனு போட்டதில், முதல், 2-வது பிரேத பரிசோதனை அறிக்கை நகல்கள், சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் எப்.ஐ.ஆர்.நகல் மட்டும் கொடுத்தார்கள்.

ஆனால் ஜிப்மர் ஆய்வறிக்கையை தரவில்லை. ஐகோர்ட்டு உத்தரவில் அது பற்றி தெரிவிக்கவில்லை என்று கூறி, ஆய்வறிக்கையை விழுப்புரம் கோர்ட்டு தரவில்லை. மீண்டும் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து, அந்த ஆய்வறிக்கையை பெறுவோம். அந்த ஆய்வறிக்கையை தந்தால் தான் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்ல முடியும்.

இந்ந 2 பரிசோதனைகளையும் மருத்துவர்களிடம் காண்பித்தோம். இதில் முதல் மற்றும் 2 வது பரிசோதனைகளில் சில வேறுபாடுகள் இருப்பது தெரியவந்தது. முதல் பிரேத பரிசோதனையை விட 2 வது பரிசோதனையில் உடலில் காயங்கள் அதிகமாக இருப்பது தெரியவந்தது.

அதுபோல மாணவி பலவந்த படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இதனால் இதில் சந்தேகம் வழுவாக உள்ளது. அதே நேரத்தம் கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

உடலில் கன்னிப்போன காயங்கள் உள்ளது, எலும்பு முறிவு உள்ளது. மேலும் 2 வது பரிசோதனையில் அதிக அளவில் காயங்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

முதல் பிரேத பரிசோதனையானது அனுபவம் இல்லாத மருத்துவர்களை வைத்து அவசர கதியில் செய்ததாகவும் 2 வது பரிசோதனையானது சிறப்பு வாய்ந்த மருத்துவர்களை வைத்து கூடுதல் பரிசோதனையும் செய்தனர். இம்முடிவுகளை நிபுணர்களிடம் கொடுத்து மேலும் ஆராய்ந்து கூடுதல் தகவல்களை தெரிவிப்போம் என அவர் கூறினார். 

தமிழக முதல்-அமைச்சரை வருகிற 27-ந்தேதி (சனிக்கிழமை) சந்திக்க உள்ளோம். சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் நடைபயணம் கைவிடப்படும். இல்லையென்றால் மாணவியின் பெற்றோர் நடைபயணத்தை மேற்கொள்வார்கள் என்றார்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்