பச்சமலையில் 109 வகையான பட்டாம்பூச்சி இனங்கள் கண்டுபிடிப்பு

பச்சமலையில் 109 வகையான பட்டாம்பூச்சி இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-08-18 21:40 GMT

பட்டாம்பூச்சி இனங்கள் கணக்கெடுப்பு

திருச்சி வனக்கோட்டத்துக்கு உட்பட்ட பச்சமலையில் வனத்துறையினருடன் இணைந்து கோவையை சேர்ந்த இயற்கை மற்றும் பட்டாம்பூச்சி அமைப்பை சேர்ந்த குழுவினர் அதன் தலைவர் பாவேந்தன் தலைமையில் கடந்த 13, 14-ந் தேதி என 2 நாட்கள் பட்டாம்பூச்சிகளின் இனங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தினார்கள்.

பச்சமலை டாப்செங்காட்டுப்பட்டி, மங்களம் அருவி, செண்பகம் சுற்றுச்சூழல் பூங்கா ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட இந்த கணக்கெடுப்பில் 6 குடும்பங்களை சேர்ந்த 109 வகையான பட்டாம்பூச்சி இனங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்த அறிக்கையை திருச்சி வனக்கோட்ட அதிகாரிகளிடம் அளித்துள்ளனர்.

சுற்றுலா மேம்படும்

இதேபோல் கடந்த 2016-ம் ஆண்டில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 105 இனங்கள் கண்டறியப்பட்டது. தற்போது 6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து பட்டாம்பூச்சி அமைப்பின் தலைவர் பாவேந்தன் கூறுகையில், பட்டாம்பூச்சி வாழ்வியல் முறைகளில் குறிப்பிட்ட சில மாதங்களில் மட்டுமே அவை வெளியே வரும். தற்போது பச்சமலையில் எடுத்த கணக்கெடுப்பில் அரியவகை பட்டாம்பூச்சி இனங்களை பார்க்க முடிந்தது. இதன் மூலம் சுற்றுலா வளர்ச்சி பெறும். மக்கள் பட்டாம்பூச்சிகளை காண ஆர்வமுடன் பச்சமலைக்கு வர தொடங்குவார்கள். இதுபோன்ற கணக்கெடுப்பை தொடர்ந்து நடத்த வேண்டும். இந்த பகுதியில் 175 வகையான பட்டாம்பூச்சி இனங்கள் இருக்க வாய்ப்புள்ளது, என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்