வீடுகளில் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு துண்டிப்பு

மயிலாடுதுறை நகராட்சிக்கு வரி செலுத்தாதவர்களின் வீடுகளில் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகளை அதிகாரிகள் துண்டித்தனர்.

Update: 2023-03-07 18:45 GMT

மயிலாடுதுறை நகராட்சிக்கு வரி செலுத்தாதவர்களின் வீடுகளில் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகளை அதிகாரிகள் துண்டித்தனர்.

வரி நிலுவை

மயிலாடுதுறை நகராட்சி பகுதிகளில் வசிப்பவர்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வீட்டுவரி, காலிமனை வரி உள்ளிட்ட வரிபாக்கிகளை ஏராளமானோர் குறிப்பிட்ட காலத்துக்குள் செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளனர்.

இவ்வாறு நீண்ட காலமாக வரி செலுத்தாமல் உள்ளவர்களின் வீடுகளில் குடிநீர் இணைப்பு மற்றும் பாதாள சாக்கடை இணைப்பை துண்டித்து நடவடிக்கை எடுக்க நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி உத்தரவிட்டார்.

குடிநீர் இணைப்பு துண்டிப்பு

இதைத்தொடர்ந்து, மயிலாடுதுறை நகராட்சி புனுகீஸ்வரர் கோவில் கீழவீதி, வடக்கு வீதி, வாய்க்கால்கரை தெரு உள்ளிட்ட பகுதிகளில் நகராட்சி வருவாய் அலுவலர் செல்வி தலைமையில் சிறப்பு வருவாய் ஆய்வாளர்கள் பிரபாகரன், சிங்காரவேலு ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர். இதில் வரி செலுத்தாதவர்களின் வீடுகளில் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பை துண்டித்தனர்.

மேலும், நகராட்சி பகுதிகளில் வரி செலுத்தாதவர்கள் உடனடியாக தாங்கள் செலுத்த வேண்டிய வரியினை நிலுவையின்றி செலுத்துமாறும், அவ்வாறு வரி செலுத்தாதவர்களின் வீடுகளில் குடிநீர் இணைப்பு மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு துண்டிக்கப்படும் என வருவாய் அலுவலர் செல்வி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்