பேரிடர் மீட்பு உபகரணங்களை தயார் நிலையில் வைக்க வேண்டும்

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பேரிடர் மீட்பு உபகரணங்களை தயார் நிலையில் வைக்க வேண்டும் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட்டார்.

Update: 2023-09-22 18:45 GMT

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பேரிடர் மீட்பு உபகரணங்களை தயார் நிலையில் வைக்க வேண்டும் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட்டார்.

வடகிழக்கு பருவமழை

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் கூறியதாவது:- வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னேற்பாடாக அனைத்து நீர் நிலைகளிலும் கரைகளை பலப்படுத்தி மழைநீர் வடிகால் வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும்.

கடந்த காலங்களில் தொடர் மழையின் போது மழைநீர் வடிகால் வாய்க்கால் உடைப்பு ஏற்பட்ட பகுதிகள், வசிப்பிட பகுதிகளில் தண்ணீர் தேங்கியதை கவனத்தில் எடுத்து தற்போது அதுபோன்ற நிலை வராத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பழுதடைந்த கட்டிடங்கள் கண்டறியப்பட்டு அவற்றை இடித்து அப்புறப்படுத்துவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தயார் நிலையில்

மரங்களை அப்புறப்படுத்துவதற்கான உபகரணங்கள், ஜே.சி.பி. வாகனங்கள், மணல் மூடைகள் தயார் நிலையில் வைக்க வேண்டும். சாலை, பாலங்களில் உடைப்பு மற்றும் மரங்கள் சாய்ந்தால் அதனை அகற்றும் பணியை துரிதமாக மேற்கொள்ள பணியாளர்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும். வைகையில் வரக்கூடிய தண்ணீர் வீணாக கடலுக்கு செல்லாத வண்ணம் முன்கூட்டியே திட்டமிட்டு கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் தண்ணீர் தேங்காத வண்ணம் பார்த்து கொள்ள வேண்டும். அவசரகால சிகிச்சைக்கான அனைத்து கட்டமைப்புகளையும் தயார் நிலையில் வைக்க வேண்டும். கால்நடைகளுக்கு தேவையான மருந்துகள் தயார் நிலையில் வைக்க வேண்டும்.

கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்

பேரிடர் கால மீட்பு பணிக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் தயார் நிலையில் வைப்பதுடன், மீன்வளத்துறையுடன் ஒருங்கிணைந்து நீச்சல் வீரர்கள் மற்றும் படகுகள் தயார் நிலையில் வைத்திட வேண்டும். மேலும் தாழ்வாக செல்லும் மின் வயர்களை சரி செய்து கூடுதலாக மின்கம்பங்கள் மற்றும் மின் மாற்றிகளை தயார் நிலையில் வைத்திட வேண்டும். ஒவ்வொரு வட்டத்திற்கும் தனி சப்-கலெக்டர் கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனர். இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து ராமநாதபுரம் வேலுமனோகரன் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நடந்த பேரிடர் கால முன்னெச்சரிக்கை ஒத்திகை பயிற்சியை கலெக்டர் பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அபிதா ஹனீப், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மாவட்ட அலுவலர் சாமிராஜ், வேலுமனோகரன் கலை அறிவியல் மகளிர் கல்லூரி தாளாளர் வேலுமனோகரன், தீயணைப்பு துறை அலுவலர்கள் கோமதி அமுதா, அருள்ராஜ், கண்ணன், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்