சேனை ஓடையில் நகராட்சிகள் இயக்குனர் ஆய்வு

கம்பத்தில் உள்ள சேனை ஓடையில் நகராட்சிகள் இயக்குனர் ஆய்வு செய்தார்.

Update: 2022-05-28 12:09 GMT

கம்பத்தில் உள்ள சேனை ஓடை கம்பமெட்டு மலை அடிவாரபகுதியில் தொடங்கி வீரப்ப நாயக்கன் குளத்தில் நிறைவடைகிறது. இந்த ஓடை ஆக்கிரமிப்பு, மண் மற்றும் குப்பைகளால் மேவி உள்ளதால் கழிவுநீர் தேங்கி சுகாதார கேடு ஏற்படுகிறது. எனவே இந்த ஓடையை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் புகார் மனுக்கள் அனுப்பினர். இதைத்தொடர்ந்து நகராட்சிகளின் மதுரை மண்டல இயக்குனர் சரவணன் இன்று கம்பம் சேனை ஓடை பகுதியில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன், ஆணையாளர் பாலமுருகன் ஆகியோர் உடன் இருந்தனர். இதைத்தொடர்ந்து கம்பம் நகராட்சி அலுவலகத்தில் மண்டல இயக்குனர் ஆலோசனை நடத்தி சுகாதாரம், குடிநீர் வசதிகளை கேட்டறிந்தார். அப்போது நகர்மன்ற தலைவர், முல்லைப்பெரியாறு நீரேற்று நிலையத்தில் குடிநீர் சுத்திகரிப்பதற்கும், நகராட்சி பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளை உரமாக மாற்றுவதற்கும் நவீன எந்திரங்களை அமைப்பதற்கான கோரிக்கை மனு கொடுத்தார். அப்போது நகராட்சி பொறியாளர் பன்னீர் செல்வம், கம்பம் தி.மு.க. வடக்கு நகர பொறுப்பாளர் வக்கீல் துரை நெப்போலியன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்