திண்டுக்கல்: அரசு பள்ளி தலைமை ஆசிரியை வீட்டில் 50 பவுன் திருட்டு

பட்டிவீரன்பட்டி அருகே, அரசு பள்ளி தலைமை ஆசிரியை வீட்டில் 50 பவுன் நகை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-08-02 03:57 GMT

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே உள்ள அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் பரமேஸ்வரி (வயது 50). இவர், தேவரப்பன்பட்டியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் இறந்து விட்டார். இதனால் தனது மகள்கள் கோகுலபிரியா (23), சரவணபிரியா (20) ஆகியோருடன் பரமேஸ்வரி வசிக்கிறார்.

பரமேஸ்வரியின் வீடு, அய்யம்பாளையம் பஸ்நிலையம் அருகே மெயின்ரோட்டில் உள்ளது. கடந்த 29-ந்தேதி, வீட்டை பூட்டி விட்டு தனது மகள்களுடன் திண்டுக்கல் அருகே வக்கம்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு பரமேஸ்வரி சென்று விட்டார்.

இந்தநிலையில் வீட்டின் முன்புறம் உள்ள இரும்பு கேட்டில் பூட்டு தொங்குவதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டில் ஆள் இல்லை என்பதை உறுதி செய்தனர். அதன்பிறகு நள்ளிரவில் வீட்டின் முன்புற கேட்டின் அருகே உள்ள சந்து வழியாக காம்பவுண்டு சுவர் ஏறி மர்ம நபர்கள் உள்ளே குதித்தனர்.

பின்னர் முன்புற வாசல் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். படுக்கை அறைக்கு சென்ற மர்ம நபர்கள், அங்கிருந்த பீரோவை உடைத்தனர். அதில் இருந்த 50 பவுன் தங்க நகை மற்றும் ரூ.20 ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்று விட்டனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு வந்த பரமேஸ்வரி, முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு துணிகள் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் வைத்திருந்த நகை, பணம் திருட்டு போய் இருந்தது.

இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீஸ் நிலையத்தில் பரமேஸ்வரி புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்