தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-08-29 18:09 GMT

சாலையில் சிதறி கிடக்கும் குப்பைகள்

திருச்சி பொன்னகர் செல்வாநகர் பகுதியில் பாரதிநகர் மெயின்ரோட்டில் சாலையோரம் தேங்கி கிடக்கும் குப்பைகளை தெருநாய்கள், மாடுகள் இழுத்து கொண்டு சாலைக்கு வருகின்றன. இதனால் அந்த சாலையே குப்பைகளாக காட்சி அளிக்கிறது. மேலும், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, இரவு நேரத்தில் கொசுத்தொல்லையால் மக்கள் மிகவும் அவதி அடைந்து வருகிறார்கள். மாநகரின் பிரதான சாலைகளில் கவனம் கொண்டு குப்பைகளை முறையாக அப்புறப்படுத்தி வரும்போது, தெருக்களில் இவ்வாறு குப்பைகள் சாலையில் சிதறி கிடப்பது காண்போரை முகம் சுளிக்க வைக்கிறது. ஆகவே மாநகராட்சி ஊழியர்கள் அங்கு தினந்தோறும் குப்பைகளை அப்புறப்படுத்தவும் அல்லது குப்பைகளை சாலைகளில் சிதறி கிடக்காமல் இருக்க மூடியுடன் கூடிய குப்பை தொட்டி வைக்கவோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பஸ் வசதியை மேம்படுத்த கோரிக்கை

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரத்தை அடுத்துள்ள பெரியசாமி கோவிலுக்கு செல்ல காலை ஒரு வேளை மட்டுமே பஸ் துறையூரிலிருந்து ஒக்கரை வழியாக இயக்கப்படுகிறது. பொதுமக்கள், மாணவ-மாணவிகள் நலன் வேண்டி, உப்பிலியபுரத்திலிருந்து காலை, மாலை இருவேளையும், குறுகலான வளைவுப்பாதையில் அசம்பாவிதங்களை கருதி மினிபஸ் இயக்க போக்குவரத்து துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பயனற்ற கழிவறை

திருச்சி மாம்பழச்சாலையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கட்டணமில்லா கழிவறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிவறை நீண்ட நாட்களாக பராமரிப்பு இன்றியும், பொதுமக்களுக்கு பயன்பாடு இன்றியும் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த கழிவறையை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

வீணாகும் குடிநீர்

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், மாவலிப்பட்டி பகுதி வழியாக காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஏராளமான தண்ணீர் தினமும் வீணாகி வருகிறது. இதனால் அருகில் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்பதால் இவற்றில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஆபத்தான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியம், தளுகை ஊராட்சி, த.முருங்கப்பட்டி தெற்கு மாரியம்மன் கோவில் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சிதிலமடைந்து வருகிறது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த நீர்த்தேக்க தொட்டி விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சிதிலமடைந்த சாலை

திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், தோளூர்பட்டி கிராமம் தெற்கு தெருவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது பெய்த மழையின் காரணமாக சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து சிதிலமடைந்து வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

Tags:    

மேலும் செய்திகள்