அம்மன் கோவில்களில் தீமிதி திருவிழா

ஆடி மாத 3-வது வெள்ளிக்கிழமையொட்டி அம்மன் கோவில்களில் தீமிதி திருவிழா நடந்தது. இதில் தீக்குண்டத்தில் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Update: 2023-08-04 18:45 GMT

திருவெண்காடு:

ஆடி மாத 3-வது வெள்ளிக்கிழமையொட்டி அம்மன் கோவில்களில் தீமிதி திருவிழா நடந்தது. இதில் தீக்குண்டத்தில் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தீமிதி திருவிழா

செம்பனார்கோவில் அருகே புஞ்சை கிராமத்தில் ஆலடி மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டும் உற்சவத்துடன் தொடங்கியது. இதனை அடுத்து தினந்தோறும் அம்மன் வீதி உலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா ஆடி மாத 3-வது வெள்ளிக்கிழமையொட்டி நடந்தது.

இதை முன்னிட்டு பக்தர்கள் கரகம், காவடி உள்ளிட்டவைகளை காவிரி கரையில் இருந்து மேளம், தாளம் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்தனர். பின்னர் கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். இதேபோல் நடராஜர் பிள்ளை சாவடி கிராமத்தில் உள்ள மகா மாரியம்மன், திருவெண்காடு மாரியம்மன் ஆகிய கோவில்களில் தீமிதி திருவிழா நடந்தது.

சீர்காழி

சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகில் பழமையான இரட்டை காளியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு சீர்காழி சட்டைநாதர் கோவிலில் இருந்து பால்குடம், பறவை காவடி, அலகு காவடி உள்ளிட்டவைகளோடு கரகம் புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக சென்று கோவிலை வந்து அடைந்தனர்.பின்னர் மதியம் அம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகம் செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து இரவு கடைவீதி பிள்ளையார் கோவிலில் இருந்து பச்சைக் காளி, பவளக்காளி வேடம் அணிந்து ஊர்வலமாக வந்து கோவிலில் முன்பு அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதனைத் தொடர்ந்து இரவு அம்மன் வீதி உலா நடந்தது. விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர். இதற்கான பாதுகாப்பு பணியில் சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் போலீசார் ஈடுபட்டனர்.

கொள்ளிடம்

கொள்ளிடம் அருகே வேட்டங்குடி கிராமத்தில் புற்றடி மாரியம்மன் கோவிலில் ஆடி மாத 3-வது வெள்ளிக்கிழமையையொட்டி தீமிதி திருவிழா நடந்தது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் மாலை மாரியம்மன் முக்கிய வீதிகளின் வழியாக பச்சைக்காளி பவளக்காளி ஆட்டத்துடன் உலா நடந்தது. இதையடுத்து கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை புதுப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி தலைமையிலான போலீசார் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்