திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட இலந்தைகூடம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் தேரோட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று அம்மனுக்கு பால், தயிர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் திரவுபதியம்மனுக்கு பட்டு உடுத்தி சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதனைதொடர்ந்து கோவிலின் முன்பு தீமிதி திடல் அமைக்கப்பட்டது. இதில் அம்மனுக்கு விரதமிருந்த 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அலகு குத்திக்கொண்டும், கரகம் ஏந்தியும், அவர்களது குழந்தைகளை தோளில் சுமந்து கொண்டும் ஊரின் முக்கிய தெருக்கள் வழியாக வலம் வந்து திடலில் இறங்கி தீ மிதித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். தீமிதி திருவிழாவை கோவில்எசனை, செம்பியக்குடி, குலமாணிக்கம், திருமழபாடி, வெங்கனூர், கீழகவட்டாங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு களித்தனர்.