டிஜிட்டல் கரன்சி கண்ணுக்கு தெரியாத 'மின்னணு பணம்' - பண பரிவர்த்தனையில் புதிய வடிவம்

பழங்காலத்தில் ஒரு பொருளை கொடுத்து மற்றொரு பொருளை வாங்கும் பண்டமாற்று முறை இருந்தது. அதைத்தொடர்ந்து வர்த்தகம் செய்வதற்கு வெள்ளி, செப்பு நாணயங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. நாட்டின் நிர்வாக முறைகளில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக நாணயத்தின் வடிவம், தன்மை மற்றும் மதிப்பில் மாற்றம் ஏற்பட்டது. அந்த வகையில் தற்போது இந்தியாவில் டிஜிட்டல் கரன்சி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

Update: 2022-11-17 05:52 GMT

டிஜிட்டல் கரன்சி

சர்வதேச அளவில் 100-க்கும் மேற்பட்ட நாடுகள் டிஜிட்டல் நாணயம் வெளியிட திட்டமிட்டு உள்ளதாக உலக பொருளாதார மன்றம் தெரி வித்து உள்ளது. ஆனால் பஹாமாஸ், நைஜீரியா உள்ளிட்ட 10 நாடுகள் ஏற்கனவே தங்களின் டிஜிட்டல் நாணயத்தை வெளியிட்டு உள்ளன. சீனா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் முன்னோட்ட அடிப் படையில் டிஜிட்டல் நாணயம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2022-23-ம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்த போது மத்திய வங்கி மூலம் டிஜிட்டல் கரன்சிகள் (சி.பி.டி.சி.) அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி நவம்பர் 1-ந் தேதி முதல் சோதனை முறையில் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. பாரத ஸ்டேட் வங்கி, பேங்க் ஆப் பரோடா, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, எச்.டி.எப்.சி., ஐ.சி.ஐ.சி.ஐ., கோடக்மகேந்திரா உள்ளிட்ட 9 வங்கிகள் மூலம் டிஜிட்டல் கரன்சிகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.

ரூபாய் நோட்டின் டிஜிட்டல் வடிவம்

ரிசர்வ் வங்கிக்கு 2 நோக்கங்கள் உள்ளன. முதலில் டிஜிட்டல் ரூபாயை உருவாக்குவது, பின்னர் அதை எந்த தடையும் இல்லாமல் அறிமுகப்படுத்துகிறது. அந்த வகையில், கடந்த 1-ந் தேதி முதல் மொத்த விற்பனையில் (சி.பி.டி.சி.- டபுள்யூ) டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அடுத்த மாதம் முதல் சில்லறை வர்த்தகத்திலும் (சி.பி.டி.சி.-ஆர்) கொண்டு வர ரிசர்வ் வங்கி திட்டமிட்டு உள்ளது. மொத்த விற்பனை டிஜிட்டல் கரன்சியை நிதி நிறுவனங்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.

டிஜிட்டல் நாணயமான இ-ரூபாய் இரண்டு வடிவங்களை கொண்டிருக்கும் என்று ரிசர்வ் வங்கி கூறுகிறது. முதலாவது, டோக்கன் அடிப்படையிலும், 2-வது கணக்கு அடிப்படையிலும் இருக்கும். டோக்கன் அடிப்படையிலான டிஜிட்டல் நாணயம் என்பது வங்கியின் ரூபாய் நோட்டு போன்றது. அதாவது, அந்த டோக்கனை வைத்திருப்பவர் அதன் மதிப்புக்கு உரிமையாளராக இருப்பார். கணக்கு அடிப்படையிலான அமைப்பில் டிஜிட்டல் கரன்சி வைத்திருப்பவர், இருப்பு மற்றும் பரிவர்த்தனைகளின் பதிவுகளை வைத்திருக்க வேண்டும்.

மத்திய வங்கியின் டிஜிட்டல் நாணயம் (சி.பி.டி.சி.) என்பது ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும் ரூபாய் நோட்டுகளின் டிஜிட்டல் வடிவம் ஆகும். அவை ஏற்கனவே உள்ள கரன்சிகள் போலவே நாட்டின் மத்திய வங்கியால் அங்கீகரிக்கப்பட்டு, நிதி கோட்பாடு களின்படி செயல்படும். வங்கிகளின் மூலமாக அல்லாமல் பணத் தை ஒருவரிடம் இருந்து மற்றொரு நபருக்கு மாற்றிக் கொடுப்பது போல் டிஜிட்டல் கரன்சிகளை பரிமாற்றம் செய்ய முடியும்.

சர்வதேச அளவில் ஏற்பு

இதனால் நம்மிடம் உள்ள ரூபாய் நோட்டுகளுக்கு சமமான டிஜிட்டல் கரன்சிகளை பெற முடியும். அதோடு வர்த்தகம் மற்றும் எதிர்கால முதலீடுகளாகவும் வைக்க முடியும். இது சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட கூடியதாக இருக்கும்.

மேலும் எப்போதும் ரூபாயின் மதிப்புக்கு நிகராகவே இருக்கும். ஆனால் டிஜிட்டல்கரன்சி என்பது பணத்தின் மின்னணு வடிவம் என்பதால் ஆன்லைன் பரிவர்த்தனைகளில் எளிதாக பயன்படுத்த முடியும். சாதாரண ரூபாய் போன்ற இதன் மதிப்பு இருக்கும். ரூபாய் நோட்டுகளை போலவே இதுவும் ஏற்றுக் கொள்ளப்படும்.

முறைகேடு, பதுக்கல் குறையும்

டிஜிட்டல் கரன்சி பரிவர்த்தனையை ரிசர்வ் வங்கி கண்காணிப்பதால் ஒவ்வொரு ரூபாய் பரிமாற்றமும் கணக்கில் வரும். இதன் மூலம் மோசடி, ஊழல், பணத்தை பதுக்குதல் போன்றவை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் டிஜிட்டல் கரன்சிகளை மத்திய வங்கியே உருவாக்கி வெளியிடு வதால் முறைகேடுகள் நடக்க வாய்ப்புகள் இல்லை. டிஜிட்டல் கரன்சிகளின் பயன்பாடு அதிகரிக்கும் போது நாம் அன்றாடம் பயன்படுத்தும் காகித வடிவிலான ரூபாய் நோட்டுகளை தயாரிப்பது பெருமளவில் குறையும் என்று கூறப்படுகிறது.

டிஜிட்டல் கரன்சிகளை யாரும் சேதப்படுத்த முடியாது. ேமலும் அதில் உள்ள ஆப்லைன் அம்சம் காரணமாக மின்சாரம் மற்றும் செல்போன் இணையதள இணைப்பு இல்லாத பகுதிகளிலும் டிஜிட்டல் கரன்சி வேலை செய்யும் என்பது குறிப்பிடத்தக்க அம்சம் ஆகும்.

கடவுச்சொல்

டிஜிட்டல் கரன்சியை ரிசர்வ் வங்கி வெளியிடும். அதை வணிக வங்கிகள் வினியோகம் செய்யும். டிஜிட்டல் கரன்சியின் சில்லறை பதிப்பு டோக்கன் அடிப்படையிலானதாக இருக்கும். மின்னஞ்சல் போன்ற இணைப்பை பெற்று அதில் உள்ள கடவுச் சொல்லை பயன்படுத்தி பணம் அனுப்ப முடியும்.

ஆனால் மக்கள் தங்கள் பணப்பையில் (வேலட்) வைத்திருக்கும் டிஜிட்டல் கரன்சிக்கு வட்டி அளிப்பதை ஆதரிக்க வில்லை என்று ரிசர்வ் வங்கியின் குறிப்பு கூறுகிறது. ஏனென்றால் மக்கள் வங்கி யில் இருக்கும் பணத்தை எடுத்து டிஜிட்டல் கரன்சி வடிவில் வைப்பது அதிகரிக்கும்.

டிஜிட்டல் ரூபாய் பரிவர்த்தனை பிளாக்செயின் வலைப்பின்னல் தொழில்நுட்பத்தின் அடிப்படையாக கொண்டு இருக்க கூடும் என்று கருதப்படுகிறது. அதற்காக வலைப்பின்னல் அரசால் சொந்தமாக உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உடனுக்குடன் பரிவர்த்தனை

டிஜிட்டல் கரன்சி, காகித வடிவில் அல்லாமல் மின்னணு வடிவிலான அரசின் இறையாண்மை கொண்ட நாணயமாக விளங்கும். டிஜிட்டல் கரன்சிகளை பயன்படுத்தினால் வங்கிகளுக்கு இடையிலான செட்டில்மெண்ட் தேவைப்படாது. இதன் மூலம் பரிவர்த்தனைகள் உடனுக்குடன் நடைபெறும். செலவும் குறையும். அதோடு இறக்குமதியாளர்களுக்கு பெரிதும் பயன் அளிக்கும். அவர்கள், வெளிநாட்டில் உள்ள ஏற்றுமதியாள ருக்கு இடைத்தரகர் இல்லாமல் டிஜிட்டல் கரன்சி மூலம் உடனுக்குடன் பணம் கொடுக்க முடியும்.

அதே போல் வெளிநாடுகளில் டிஜிட்டல் பணமாக சம்பளம் பெறுபவர்கள் குறைந்த கட்டணத்தில் தங்களின் உறவினர்கள் மற்றும் பிறநாடுகளில் வசிப்பவர்களுக்கு பணத்தை எளிதாக அனுப்ப முடியும். எனவே இது வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டா ளர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெறும் என்று கருதப்படுகிறது.

வங்கிகள் என்னவாகும்?

நாட்டில் பணத்தை நிர்வகிப்பதற்கான பெரும் செலவை குறைக்க ரிசர்வ் வங்கி விரும்புகிறது. இதன் மூலம் பணத்தை அச்சடிப்பது, புழக்கத்தில் விடுவது, வினியோகிக்க ஆகும் செலவு போன்றவை குறையும் என்று கருதப்படுகிறது.

டிஜிட்டல் கரன்சிகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் நாம் அன்றாட பயன்படுத்தும் ரூபாய் நோட்டுகளின் உற்பத்தி வெகுவாக குறையும். மேலும் ரூபாய் நோட்டு காகித பயன்பாடு குறையும். இணைய வழியாக பணப்பரிமாற்றம் செய்யப்படும் போது வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்.களில் பணம் நிரப்புதல், பாதுகாப்பு போன்றவற்றில் பெரிய மாற்றம் ஏற்படும். இது வங்கிகளின் தற்போதைய நடைமுறை நிலை செயலாக்கத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கணிக்கப்படுகிறது.

கிரிப்டோ கரன்சி-விளக்கம்



டிஜிட்டல் கரன்சியும், கிரிப்டோ கரன்சியும் ஒன்று அல்ல. அவை முற்றிலும் மாறுபட்டவை. பிட்காயின், லைட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சி என்பது பிளாக்செயின் தொழில் நுட்பத்தை அடிப்படையாக கொண்ட பரவலாக்கப்பட்ட டிஜிட்டல் சொத்து ஆகும். அவை, எந்த ஒரு அரசின் கட்டுப்பாட்டிலும் இல்லாமல் வர்த்தக சந்தைக்கு வருபவை. அதை யார் வேண்டுமானாலும் உருவாக்க முடியும். மேலும் கிரிப்டோ கரன்சிகள் எந்த ஒரு வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசின் சட்டவிதிகளுக்கு உட்பட்டது அல்ல. எனவே அவை சட்டப்பூர்வ அந்தஸ்து இல்லாதவை. மேலும் அதன் விலை மாறுபட்டுக் கொண்டே இருக்கும். இதனால் அதை வைத்து தொழில் செய்வதும் கடினம் என்று கூறப்படுகிறது.

கிரிப்டோ கரன்சியில் ரகசிய குறியீடை பயன்படுத்தி அனுப்பும் பணத்தை அதை பெறுபவர் மற்றொரு குறியீட்டாக மாற்றி பெற்றுக் கொள்கிறார்கள். இதனால் யாரிடம் இருந்து யாருக்கு பணம் செல்கிறது என்பதை கண்டறிய முடியாது. இதனால் கிரிப்டோ கரன்சியை பயன்படுத்தி சூதாட்டம் போல வர்த்தகம் நடைபெற்றது. எனவே கிரிப்டோ கரன்சிக்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.

மேலும் தனியார் கிரிப்டோகரன்சிகள் மூலம் பணமோசடி, பயங்கரவாதத்துக்கு நிதியளித்தல், வரி ஏய்ப்பு போன்றவற்றில் முதலீட்டாளர்கள் ஈடுபடலாம் என ரிசர்வ் வங்கி கவலை தெரிவித்தது. எனவே கிரிப்டோ கரன்சியை இந்தியா அங்கீகரிக்க வில்லை. ஆனாலும் அதில் முதலீடு செய்வதன் மூலம் கிடைக்கும் லாபத்திற்கு மட்டும் இந்திய அரசு வரி விதித்து உள்ளது.

யு.பி.ஐ-க்கும், டிஜிட்டலுக்குமான வித்தியாசம்


இளைய தலைமுறையினர் மத்தியில் ஆன்லைன் முறையில் பணம் பரிவர்த்தனை செய்வது அதிகரித்து உள்ளது. இதில் யு.பி.ஐ. தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது. யு.பி.ஐ. என்பது ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவு ஆகும். இது 2 வங்கி கணக்குகளுக்கு இடையில் உடனடியாக பணப் பரிவர்த்தனையை அனுமதிக்கிறது. வங்கி கணக்கு விவரங்களை நிரப்ப வேண்டிய அவசியமின்றி, ஆதார் எண், மொபைல் எண் மற்றும் வாடிக்கை யாளரின் மின்னஞ்சல் முகவரி மூலம் ஒரு ஸ்மார்ட்போனில் பணத்தை அனுப்பவோ அல்லது பெறவோ அனுமதிக்கிறது. இந்த யு.பி.ஐ. தொழில் நுட்பத்தின் மூலம் தான் சின்ன சின்ன கடைகளில் கூட நாம் வாங்கும் பொருட்களுக்கு பணம் செலுத்த வசதியாக ஸ்கேனர் குறியீடு (கியூஆர் கோடு) வைக்கப்பட்டு உள்ளது. அதில் ஸ்கேன் செய்து தாங்கள் வாங்கிய பொருட்களுக்கு உரிய பணத்தை வாடிக்கையாளர்கள் செலுத்துகின்றனர்.

இந்த முறையில் ஒவ்வொரு நாளும் பல கோடி ரூபாய் பரிவர்த்த னை செய்யப்படுகிறது. இது ஒருவரின் வங்கி கணக்கில் இருந்து மற்றொருவரின் வங்கி கணக்கிற்கு பணம் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் டிஜிட்டல் கரன்சி முறையில் ஒருவரிடம் இருந்து மற்றொரு நபருக்கு நேரடியாக கரன்சி பரிமாற்றம் செய்யப்படு கிறது. இடையில் வங்கியின் செயல்பாடு என்பது இருக்காது. ஆனாலும் டிஜிட்டல் கரன்சி பரிவர்த்தனை என்பது பிளாக்செயின் தொழில் நுட்பம் மூலம் கண்காணிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டிஜிட்டல் கரன்சி மைனிங்

மைனிங் என்பது அதிக திறன் கொண்ட சூப்பர் கம்ப்யூட்டர்களை நிறுவி, கிரிப்டோ கரன்சியில் உருவாக்கும் கணக்கு சிக்கல்களை தீர்த்து வைப்பதாகும். இதன் மூலம் புதிய டிஜிட்டல் கரன்சிகள் உருவாக்கப்படுகிறது. அதாவது ஒரு தங்க சுரங்கத்தில் பூமிக்கடியில் 1000 கிலோ தங்கம் இருக்கும் என்று வைத்து கொள்வோம். இந்த ஆயிரம் கிலோ தங்கத்தை அப்படியே ஒரே நேரத்தில் எடுக்க முடியாது. ஏனென்றால் 10 அடியில் 100 கிலோ தங்கம் இருக்கும். அதற்கு அடுத்து 20 அடியில் 100 கிலோ கிடைக்கும். இப்படியே அடி, அடியாக தோண்டி கொண்டு போனால் தான் 1000 கிலோ தங்கத்தை எடுக்க முடியும். இதே போலத்தான் கிரிப்டோ மைனிங்கில் கரன்சிகள் உருவாக்கப்படுகிறது. பிளாக் செயின் தொழில்நுட்பத்தில் ஒரு கரன்சியை யார் வேண்டுமானாலும் உருவாக்கலாம். அந்த கரன்சி உருவாக்கும் போதே, அது எத்தனை கரன்சிகள் உருவாக்க வேண்டும் என்று வகுக்கப்பட்டு விடும். இந்த கரன்சிகளை அப்படியே மொத்தமாக ஒருவர் எடுத்து விட முடியாது. இந்த காயினை பெற அந்த தொழில்நுட்பத்தில் உருவாகும் கணக்குகளை தீர்க்க வேண்டும். இந்த கணக்குகளை தீர்த்து கொண்டே வந்தால் புதிய கரன்சிகள் உருவாகி கொண்டே இருக்கும். இந்த கணக்குகளை தீர்த்து வைப்பது தான் மைனிங் என்று பெயர்.

இந்த மைனிங் தொழிலில் உலகம் முழுவதும் ஏராளமானோர் ஈடுப்பட்டு உள்ளனர். கிரிப்டோ கரன்சியில் உள்ள டோகி காயினை எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் வழங்கலாம் என வகுக்கப்பட்டுள்ளது. எனவே டோகி காயினின் சிக்கல்களை தீர்த்து கொண்டே வந்தால் டோகி காயின் உருவாகி கொண்டே இருக்கும். ஆனால் பிட்காயினில் குறிப்பிட்ட அளவு மட்டுமே காயின் வழங்க முடியும் என்று வகுக்கப்பட்டுள்ளது. எனவே அதன் சிக்கல்களை தீர்த்து கொண்டே இருந்தாலும் பிட்காயின் குறைந்த அளவே கிடைக்கும். டோகி காயின் மைனிங்கில் ஆயிரம் கணக்கு சிக்கல்களை தீர்த்தால் 1 காயின் கிடைத்து விடும். ஆனால் பிட்காயினில் லட்சம் கணக்கு சிக்கல்களை தீர்த்தால் ஒரு காயின் கூட கிடைக்காது. இதன்காரணமாக தான் பிட்காயின் விலை அதிகமாகவும், டோகி காயினின் விலை குறைவாகவும் உள்ளது. இப்படி உருவாக்கப்படும் டிஜிட்டல் கரன்சிகள், டாலர் கணக்கில் மதிப்பிடப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது. குறைந்த எண்ணிக்கையில் உள்ள டிஜிட்டல் கரன்சியை அதிகமாக வாங்குவதால் அதன விலை அதிகமாக நிர்ணயிக்கப்படுகிறது.

பிளாக்செயின் தொழில்நுட்பம்


பிளாக்செயின் தொழில்நுட்பம் தொடக்கத்தில் பிட்காயினின் முதுகெலும்பாக உருவெடுத்தது. இது பரிவர்த்தனைகளின் அழியாத டிஜிட்டல் பொது பேரேடு (லெட்ஜர்) ஆகும்.

பிளாக்செயின் தொழில்நுட்பத்தை விளக்குவது என்றால், இரண்டாக கிழிக்கப்பட்ட ஒரு பணத்தின் ஒரு பகுதியை பயன்படுத்த மற்றொரு பகுதி அவசியம். அது இருந்தால் தான் அந்த பணத்தை பயன்படுத்த முடியும்.

அந்த வகையில் தான், ஒரு தொகுதி குறியீட்டின் மதிப்பை பயன்படுத்த மற்றொரு ெதாகுதி குறியீடு தேவை. அப்போது தான் நாம் அதை செயல்படுத்த முடியும். இதை செய்வது தான் பிளாக்செயின் தொழில் நுட்பம் ஆகும். இதில், ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு (பியர்-டு-பியர்) கரன்சிகளை வினியோகிக்கிறது.

இந்த அமைப்பில் தேதி, நேரம் ஆகியவை குறியாக்க வடிவில் சேமித்து வைக்கப்படும். அதில் எந்த ஒரு தகவலையும் அழிப்ப தோ, மாற்றுவதோ கடினம். ஒவ்வொரு தகவல் பரிமாற்றமும் வலை இணைப்பு கணுக்கள் மூலமாகவும், பராமரிப்பாளர்கள் மூலமாகவும் சரிபார்க்கப்படும். வெளிப்படைத்தன்மை, பரவலாக்கம், பொறுப்புக்கூறல், மாறாத தன்மை ஆகிய கொள்கைகளில் பிளாக்செயின் தொழில்நுட்பம் செயல்படுகிறது.

டிஜிட்டல் கரன்சி என்றால் என்ன?

டிஜிட்டல் கரன்சி என்பது கிரிப்டோ, ஸ்டேபேல் காயின், மத்திய வங்கி கரன்சி என 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. இந்த 3 பிரிவுகளும் பிளாக்செயின் என்ற தொழில் நுட்பத்திலோ, அல்லது இது போன்று உள்ள பிற தொழில் நுட்பத்திலோ செயல்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தை எளிமையாக புரிந்து கொள்ள வேண்டுமென்றால் பணத்திற்கும், டிஜிட்டல் கரன்சிக்கும் உள்ள வேறுபாடுகளை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். பணம் என்பது ஒரு நாட்டு அரசால் மதிப்பிடப்பட்டு, அச்சிடப்படுகிறது. அந்த பணத்தை மக்களும், வங்கியும் பயன்படுத்துவதற்கு 3-வது தரப்பு நிச்சயம் தேவை. அதில் 3-வது தரப்பு என்பது வங்கியின் மென்பொருள். இந்த மென்பொருள் தான் நமது கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது, அதனை யாருக்கு பரிமாற்றம் செய்கிறோம் போன்ற விவரங்களை பதிவு செய்கிறது. அதே போல் ஆன்லைன் பரிமாற்றம், ஏ.டி.எம். கார்டு போன்ற பயன்பாட்டிற்கும் இந்த மென்பொருள் தான் காரணம். இந்த மென்பொருள் இருப்பதால் தான் ஒரு வங்கியில் நாம் வைத்து இருக்கும் பணத்தை வெவ்வேறு வங்கி ஏ.டி.எம்.களிலும் எடுக்க முடிகிறது. இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது, பணத்தை கையாள்வதில் வங்கியும், மக்களும் மட்டும் போதாது. 3-ம் தரப்பான இந்த மென்பொருள் கட்டாயம் தேவை. இந்த மென்பொருள் இல்லாவிட்டால் காகிதமாக இருக்கும் இந்த பணத்தை கூட நம்மால் இப்போது பரிமாற்றம் செய்ய முடியாது.

வேறுபாடு

ஆனால் டிஜிட்டல் கரன்சி என்பது, 2 தரப்பு மட்டுமே இருக்கும். அதாவது மென்பொருள் மற்றும் மக்கள் இடையே நடக்கும் பரிமாற்றம் மட்டும் தான் டிஜிட்டல் கரன்சி. அதில் வங்கிகளுக்கும், பணத்தை அச்சிடும் அரசுக்கும் அதில் வேலை கிடையாது. தொழில்நுட்ப வளர்ச்சியில் பணப்பரிமாற்றத்திற்கு 3-ம் தரப்பு இருக்க வேண்டும் என்ற நிலை உருவான போது, வங்கிகள் வேண்டாம், 2 தரப்பு மட்டும் போதும் என்று வாதம் எழுந்தது. ஆனால் 3-ம் தரப்பு இல்லாமல் பணப்பரிமாற்றம் நடக்காது என்று நிதியாளர்கள் கூறினர். ஆனால் அது சாத்தியமே என்ற அடிப்படையில் கொண்டு வரப்பட்டதுதான் டிஜிட்டல் கரன்சி. அது தான் டிஜிட்டல் கிரிப்டோ கரன்சி. இந்த கிரிப்டோ கரன்சியில் உள்ளவை தான் பிட்காயின், எத்திரியம், டோகி போன்ற ஆயிரக்கணக்கான காயின்கள்.

அப்படியென்றால், நமக்குள் எழும் அடுத்த கேள்வி, பணத்தை அரசு அச்சிடவில்லையென்றால், டிஜிட்டல் கரன்சி எப்படி உருவாகிறது, அதற்கு எப்படி மதிப்பு கிடைக்கிறது, அதனை எப்படி பரிமாற்றம் செய்ய முடிகிறது? என்ற கேள்விகள் எழலாம். அதற்கான விடைதான் இந்த பிளாக் செயின் என்ற தொழில்நுட்பம். இந்த தொழில்நுட்பத்தில் டிஜிட்டல் கரன்சிகள் உருவாக்கப்படுகின்றன. மற்றொரு பிரிவான மத்திய வங்கி கரன்சியில், பணத்தை அந்த நாட்டின் மத்திய வங்கியே உருவாக்குகிறது. இது தான் கிரிப்டோவிற்கும், மத்திய வங்கி கரன்சிக்கும் உள்ள முக்கிய வேறுபாடு.

Tags:    

மேலும் செய்திகள்