முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ரூ.339 கோடி வருமானம் மறைப்பு; ஐகோர்ட்டில் வருமான வரித்துறை தகவல்

தொழிலதிபர் சேகர்ரெட்டி, குட்கா உற்பத்தியாளரிடம் பெறப்பட்ட தொகை உள்ளிட்ட சுமார் 339 கோடி ரூபாய் வருமானத்தை முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மறைத்துள்ளதாக வருமான வரித்துறை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறியுள்ளது.

Update: 2022-12-03 00:27 GMT

வங்கி கணக்குகள் முடக்கம்

அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கரின் வீடு உள்ளிட்ட இடங்களில் நடத்திய சோதனையின்படி, 2011-12-ம் நிதியாண்டு முதல் 2018-19-ம் நிதியாண்டு வரையிலான காலகட்டத்தில் அவரது வருமானத்தை நிர்ணயம் செய்து, அவருக்கு ரூ.206.42 கோடி வருமான வரி விதிக்கப்பட்டது.

இந்த வரியை விஜயபாஸ்கர் செலுத்தாததால், அவருக்கு சொந்தமான 117.46 ஏக்கர் நிலம், 4 வங்கி கணக்குகளை வருமான வரித்துறையினர் முடக்கினர். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், விஜயபாஸ்கர் தொடர்ந்த வழக்கிற்கு வருமான வரித்துறை தாக்கல் செய்துள்ள பதில் மனு தாக்கல் செய்தது.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ள கூடுதல் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

குவாரி வருமானம் மறைப்பு

விஜயபாஸ்கரின் வீடு உள்ளிட்ட இடங்களில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7-ந்தேதி நடந்த சோதனையில் கிடைத்த ஆவணங்கள் மூலம் மிகப்பெரிய அளவில் அவர் வரி ஏய்ப்பு செய்துள்ளது தெரிய வந்துள்ளது. அவருடைய குவாரியில் 2011-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் ரூ.66 கோடியே 49 லட்சத்து 84 ஆயிரத்து 945 செலவு செய்யப்பட்டுள்ளது.

அந்த குவாரியில் இருந்து வருமானமாக ரூ.122 கோடியே 58 லட்சத்து 8 ஆயிரத்து 41 கிடைத்துள்ளது. இந்த விவரங்களை விஜயபாஸ்கர் மறைத்துள்ளார்.

இதுதவிர சேகர் ரெட்டி பங்குதாரராக உள்ள எஸ்.ஆர்.எஸ்., மைனிங் நிறுவனத்திடமிருந்து கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில், ரூ.85 கோடியே 45 லட்சத்து 75 ஆயிரத்து 765 பெற்றுள்ளார்.

குட்கா பணம்

இதே காலகட்டத்தில் பான் மசாலா குட்கா உற்பத்தியாளர்களிடமிருந்து ரூ.2 கோடியே 40 லட்சம் பெற்றுள்ளார்.

முன்னாள் முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி கடந்த 2017-ம் ஆண்டு முதல்-அமைச்சராக பொறுப்பேற்றபோது அவரது ஆதரவு எம்.எல்.ஏ. க்கள் கூவத்தூரில் உள்ள தனியார் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டனர். இதற்கான வாடகை கட்டணமாக ரூ.30 லட்சத்து 90 ஆயிரத்தை விஜயபாஸ்கர் வழங்கியுள்ளார்.

அதேபோல ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய பதுக்கி வைக்கப்பட்ட தொகை கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, விஜயபாஸ்கரின் ஆதரவாளரான நயினார் முகமது என்பவரது வீட்டில் ரூ.2 கோடியே 94 லட்சத்து 88 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த தொகையுடன் சேர்த்து விஜயபாஸ்கரிடம் ரூ.15 கோடியே 46 லட்சத்து 8 ஆயிரமும் பறிமுதல் செய்யப்பட்டது.

ரூ.339 கோடி

விஜயபாஸ்கரின் சென்னை மற்றும் புதுக்கோட்டை வீடுகளில் இருந்து ரூ.25 லட்சத்து 8 ஆயிரத்து 350 பறிமுதல் செய்யப்பட்டது. ஆக மொத்தம் அவருக்கு கிடைத்த வருமானம் மற்றும் குவாரி மூலமாக கிடைத்த வரவு-செலவு இனங்கள் மூலமாக கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை சுமார் 339 கோடி ரூபாய் வருமானத்தை மறைத்துள்ளது தெரிய வந்துள்ளது.

இதன்காரணமாக அவர் செலுத்த வேண்டிய வருமான வரி ரூ.206.42 கோடி வரிபாக்கிக்காகவே அவருடைய சொத்துக்களும், வங்கி கணக்குகளும் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்