வாக்கு வங்கிக்காக திட்டங்களை நிறைவேற்றவில்லை; மக்களின் நலன் தான் முக்கியம்

வாக்கு வங்கிக்காக திட்டங்களை நிறைவேற்றவில்லை, மக்களின் நலன் தான் முக்கியம் என புதுக்கோட்டையில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Update: 2022-06-08 18:39 GMT

புதுக்கோட்டை

நலத்திட்ட உதவிகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தல், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டல், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா புதுக்கோட்டையில் மாவட்ட விளையாட்டரங்கத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரூ.81.31 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 140 திட்டப்பணிகளை திறந்து வைத்தும், ரூ.143.05 கோடி மதிப்பீட்டிலான 1,397 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.379.30 கோடி மதிப்பீட்டில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் தீட்டப்பட்டிருக்கக்கூடிய திட்டங்களுக்கு, அதற்கான உத்தரவுகளை எல்லாம் அந்தக் கோட்டையிலிருந்து பிறப்பித்து, அதை நிறைவேற்றுவதற்காக "புதுக்" கோட்டைக்கு வந்திருக்கிறேன்.

தனிமனிதன் தேவையை...

ஒரு காலத்தில் திருச்சி மாவட்டத்தோடு இருந்தது இந்த புதுக்கோட்டை. 1974-ம் ஆண்டு அதனை பிரித்து, புதுக்கோட்டையை தனி மாவட்டமாக ஆக்கியவர் நம்முடைய கருணாநிதி. அப்போது, புதுக்கோட்டை அரண்மனையை விலைக்கு வாங்கி, மாவட்ட கலெக்டர் அலுவலகமாக மாற்றி, அதற்கு ராஜா கோபால தொண்டைமான் மாளிகை என பெயர் சூட்டினார் கருணாநிதி.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மொத்தமாக சொல்வதாக இருந்தால், மாநிலம் முழுமைக்கும் என்ன தேவை, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் என்ன தேவை, ஒவ்வொரு தனிமனிதனின் தேவையும் என்ன என்பதை பார்த்துப் பார்த்து செய்யக்கூடிய அரசாக நம்முடைய தமிழ்நாடு அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

விளிம்பு நிலை மக்களின் அரசு

தமிழ்நாட்டை கல்வியில், வேலைவாய்ப்பில், தொழில் வளர்ச்சியில், உள்கட்டமைப்பில் சிறப்புற வளர்த்தவர் நம்முடைய கருணாநிதி. இதனை அனைத்தையும் விஞ்சியதாக சாமானியர்களின் வாழ்க்கையை பற்றி கருணாநிதி நினைத்தார். இந்த அடிப்படையில் தான் இன்றைக்கு உங்களால் உருவாக்கப்பட்ட இந்த அரசு செயலாற்றி கொண்டிருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

ஏழை, எளிய மக்கள் எத்தனை போ் வாழ்க்கை தரம் இந்த ஆட்சியில் உயர்ந்தது என்பதை இந்த ஆட்சியின் சாதனையாக இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். ஏழை, எளிய விளிம்பு நிலையில் இருக்க கூடிய மக்கள் தங்களது கோரிக்கைக்காக அரசாங்கத்தை சுலபமாக அணுகும் வகையில் அரசு எந்திரம் செயல்பட வேண்டும் என நான் நினைக்கிறேன். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர், பழங்குடியினரின் சமூக வாழ்க்கை எவ்வளவு மேன்மை அடைந்திருக்கிறதோ, அதனையே நான் சாதனையாக நினைக்கிறேன். அதுமட்டுமல்லாமல், இருளர்கள், நரிக்குறவர்கள் போன்ற சமுதாயத்தை சார்ந்திருக்க கூடியவர்கள் விளிம்பு நிலை மக்களின் அரசாக இது செயல்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

திராவிட மாடல் ஆட்சி

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் போன்ற குரலற்றவர்களின் குரலாக இந்த அரசு இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இத்தகைய மக்களுக்கு தேவையான அனைத்தையும் பார்த்து, பார்த்து செய்து தர வேண்டும், சிந்தித்து சிந்தித்து நிறைவேற்றி தர வேண்டும் என்று நாம் நினைக்கிறோம். வளர்ச்சி என்ற பாதையை 'டெவலப்மெண்ட்' என்ற பொதுவான அர்த்தத்தில் சொல்லவில்லை. மாற்றம், மேன்மை, உள்ளார்ந்த மலர்ச்சி என்ற பண்பாட்டு அடையாளத்துடன் நாங்கள் சொல்கிறோம். ஒரு தொழிற்சாலை உருவாவது வளர்ச்சி. அந்த தொழிற்சாலை வருவதன் மூலமாக அந்த வட்டாரம் அடையக்கூடிய பயன், அந்த வட்டாரத்தை அடையக்கூடிய வேலைவாய்ப்புகள், அதன் மூலமாக அங்குள்ள மக்களின் வாழ்க்கை தரம் அடையக்கூடிய உயரம், சமூகத்தில் ஏற்படும் மாற்றம் ஆகிய அனைத்தையும் சேர்த்துத்தான் வளர்ச்சி என்று சொல்கிறோம். அத்தகைய வளர்ச்சியை உருவாக்க நாங்கள் நினைக்கிறோம்.

ஒரு பெருந்தொழிற்சாலையை உருவாக்கி, எத்தனை பெண்களுக்கு வேலை கொடுத்துள்ளது? மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டங்கள் எத்தனை நிறைவேற்றப்பட்டிருக்கின்றன? ஆகவே, இதைத்தான் கம்பீரமாகச் சொல்கிறோம், இதுதான் 'திராவிட மாடல்' ஆட்சி என்று பெருமையோடு சொல்லிக் கொண்டிருக்கிறோம். இதுதான் அதனுடைய உள்ளடக்கம். விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கைத் தேவையையும் பூர்த்தி செய்வதுதான் திராவிட மாடல்.

வாக்கு வங்கிக்காக அல்ல...

மக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமானால், அதிகாரத்துக்கு வந்தாக வேண்டும் என்பதை உணர்ந்ததால், தேர்தலில் குதித்த திராவிட முன்னேற்றக் கழகம், மக்கள் தான் எங்களுக்கு முக்கியமே தவிர, இப்படிப்பட்ட பதவிகள் அல்ல. எத்தகைய திட்டத்தை கொண்டு வந்தாலும், அதனை வாக்கு வாங்கக்கூடிய தந்திரம் என்று கொச்சைப்படுத்துபவர்கள் சிலர் இருக்கிறார்கள். வாக்குகளை வாங்குவதற்காகத்தான் இதை எல்லாம் நிறைவேற்றுகிறோம் என்று குற்றம் சாட்டக்கூடியவர்கள், விமர்சனம் செய்யக்கூடியவர்கள் இந்த நாட்டில் இருக்கிறார்கள்.

நான் கேட்கிறேன், இருளர்களுக்கோ, நரிக்குறவர்களுக்கோ, மாற்றுத்திறனாளிகளுக்கோ, திருநங்கைகளுக்கோ வாக்கு வங்கி அதிகமாக இருக்கிறதா? அவர்கள் வாக்கு வங்கி உள்ளவர்களா? என்று பார்த்து திட்டங்களை நிறைவேற்றுவதில்லை. இப்படி வாக்கு வங்கி இல்லாதவர்களது வாழ்க்கைக்கும், அவர்களது நலனுக்கும் உதவிகளை செய்யும் அரசு தான் தி.மு.க. அரசு என்பதை நீங்கள் புரிந்து கொண்டாக வேண்டும். தி.மு.க. அரசினுடைய நோக்கம் சிந்தனை, செயல் ஆகிய அனைத்தும் மக்கள் நலன்தான், சாதாரண மக்களின் நலன்தான், ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்தான்.

மக்களுக்கான அரசு

தன்னுடைய வாழ்நாள் முழுக்க கடைசி நாள்வரை, கடைசி நொடிவரை பகுத்தறிவை ஊட்டி எந்த மக்களின் சுயமரியாதைக்காக தந்தை பெரியார் பாடுபட்டாரோ. உலக அரசியலை எல்லாம் எடுத்துச் சொல்லி, அரசியல் எழுச்சியையும், தமிழ் உணர்வையும் பேரறிஞர் அண்ணா எந்த மக்களுக்காக உணர்வு ஊட்டினாரோ. "எங்களை எல்லாம் உருவாக்கிய பெரியார் அவர்களுடைய மொழியில், இது மூன்றாம் தர அரசு கூட அல்ல, நான்காம் தர அரசு. நாங்கள் நான்காவது தரத்தை சார்ந்திருக்கக்கூடியவர்கள்; ஆகவே, நாலாந்தர அரசு நாட்டிலே இருக்கிறது.

நாலாந்தர மக்களுடைய நல்வாழ்வுக்காக பாடுபடும் அரசு இது என்பதை இறுமாப்போடு, பெருமையோடு, கர்வத்தோடு-பெரியார் அவர்களுடைய பெயரிலும், அண்ணாவின் பெயரிலும் சொல்லிக்கொள்வதில் நான் பெருமகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்" என்று சமூகநீதிக்காகவும் சமத்துவத்துக்காகவும் தன்னையே அர்ப்பணித்து கொண்ட கருணாநிதி எந்த மக்களுக்காக பாடுபட்டாரோ, அந்த மக்களின் அரசுதான் இன்று கோட்டையில் நடக்கிறது. அந்த மக்களுக்கான அரசையே தொடர்ந்து நடத்துவோம் என்பதை இங்கு உங்கள் முன்னால் நின்று முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான் குறிப்பிட விரும்புகிறேன்.

கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்

இங்கே பேசியிருக்கக்கூடிய எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் அவரவர் தொகுதியில் இருக்கக்கூடிய சில பிரச்சினைகளை, கோரிக்கைகளை சுட்டிக்காட்டி, ஆனால், அதே நேரத்தில் ஏற்கனவே சொன்ன அந்த உறுதிமொழி, வாக்குறுதி ஓரளவுக்கு காப்பாற்றப்பட்டிருக்கிறது, மகிழ்ச்சியடைகிறோம், அதற்காக நன்றி சொல்கிறோம் என்றும் சொன்னார்கள். ஆகவே, இன்னும் சில கோரிக்கைகள், பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும், நான் மறுக்கவில்லை.

நீங்கள் என்னென்ன கோரிக்கைகளை இங்கே மட்டுமல்ல, சட்டமன்றத்திலும் சரி, மக்கள் மன்றத்திலும் சரி எந்த கோரிக்கைகளை வைத்தாலும் அதில் இருக்கக்கூடிய உண்மையை, நியாயத்தை இந்த அரசு புரிந்துகொண்டு, அதற்குரிய நடவடிக்கையை நிச்சயமாக, நாங்கள் உறுதியாக எடுப்போம் என்ற நம்பிக்கையை, உறுதியை இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லி, மீண்டும் ஒரு முறை நன்றி கூறி விடைபெறுகிறேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

அமைச்சர்கள்

விழாவில் அமைச்சர்கள் மெய்யநாதன், ரகுபதி, கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், பெரியகருப்பன், ராஜகண்ணப்பன், சிவசங்கர், அன்பில் மகேஷ்பொய்யாமொழி, எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அதிகாரிகள் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட கலெக்டர் கவிதாராமு வரவேற்று பேசினார். முடிவில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்