சலவை தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு சலவை தொழிலாளர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி அண்ணாநகர் சலவைத்துறையில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகத்திலுள்ள கடைகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி சலவை தொழிலாளர்கள் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சலவை தொழிலாளர்கள் தர்ணா
தூத்துக்குடி மாவட்ட சலவை தொழிலாளர் சங்க தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில் சலவை தொழிலாளர்கள் நேற்று காலையில் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில், ''தூத்துக்குடியில் ஆறு, குளங்கள் இல்லாததால் 1957-ம் ஆண்டு முதல்-அமைச்சராக இருந்த காமராஜர் காலத்தில் அண்ணா நகர் சலவைத்துறை கட்டிக் கொடுக்கப்பட்டது. இந்த சலவைத்துறையில் சலவைத்தொழில் செய்து வந்தோம். இந்த நிலையில் சலவைத்துறை பழுதடைந்து விட்டது. அதனை சீரமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டு இதுவரை முடிக்கப்படவில்லை. மேலும் துணி காய வைக்கும் இடத்தில் பூங்கா அமைக்கப்பட்டிருக்கிறது. அதனால் துணி காய வைக்க இடையூறாக உள்ளது. அந்த பூங்காவை அகற்ற வேண்டும். சலவைத் தொழிலாளர்களால் நடத்தப்படும் திருக்குறிப்பு தொண்ட நாயனார் தொடக்கப் பள்ளியை அரசு உதவி பெறும் பள்ளியாக மாற்ற வேண்டும். அண்ணாநகர் சலவை துறையில் உள்ள வணிக வளாக கடைகளை சலவை தொழிலாளர்களுக்கு அயனிங் கடை வைப்பதற்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறி உள்ளனர்.
ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரியை...
தூத்துக்குடி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்க தலைவர் இசக்கிராஜா தலைமையில் இயகத்தை சேர்ந்தவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், ''ஸ்ரீவைகுண்டத்திலுள்ள அரசு ஆஸ்பத்திரியில் போதிய டாக்டர்கள், ஆம்புலன்சு வசதி இல்லை. அந்த ஆஸ்பத்திரியை தரம் உயர்த்தவும், போதிய டாக்டர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோன்று தூத்துக்குடி 3-வது மைல் ரெயில்வே பாலத்தை சுற்றிலும் கருவேல மரங்கள் வளர்ந்து சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளது. அந்த பகுதியில் உள்ள கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறி உள்ளனர்.