இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களின் பாதுகாப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபி உத்தரவு

இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களின் பாதுகாப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

Update: 2022-09-30 14:33 GMT

சென்னை,

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பாஜக அலுவலகம் மற்றும் இந்து மத அமைப்புகளின் நிர்வாகிகளை குறிவைத்து தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றன. கோவை, சேலம், மதுரை, கன்னியாகுமரி உள்பட பல மாவட்டங்களில் பாஜக மற்றும் இந்து மத அமைப்பான ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின் வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்தது.

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்து அமைப்புகள் தொடர்பான இடங்களில், யாருக்கெல்லாம் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து தகவல் தெரிவிக்க, காவல் உயர் அதிகாரிகளுக்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தமிழகம் முழுவதும் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்கள் எத்தனை உள்ளது என்பது குறித்தும், அதில் எத்தனை பேருக்கு நிரந்தர பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய அதில் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்