திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-01-14 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

அறுபடை வீடு

ஒவ்வொரு ஆண்டும் தமிழ் கடவுளான முருகப்பெருமானை தரிசனம் செய்த பின்னர் பக்தர்கள் தங்களது வீடுகளுக்கு சென்று தை பொங்கல் திருநாளை கொண்டாடுவது வழக்கம்.

அதுபோல் இந்த ஆண்டு அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கடந்த 3 நாட்களாக அலகு குத்தியும், காவடி, பால்குடம் எடுத்தும் பாத யாத்திரையாகவும், வாகனங்களிலும் வந்தனர்.

பக்தர்கள் குவிந்தனர்

இவ்வாறாக வந்த ஏராளமான பக்தர்கள் நேற்று திருச்செந்தூரில் குவிந்தனர். அவர்கள் கடற்கரையில் புனித நீராடி நீண்ட வாிசையில் நின்று சாமி தரிசனம் செய்து, தங்களது நேர்த்தி கடனை நிறைவேற்றினர்.

மேலும், பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் பெரும்பாலானோர் கோவில் கடற்கரையில் அவர்கள் கொண்டு வந்த முருகபெருமானின் சிலையை வைத்து வழிபட்டனர். அதேபோல் கடற்கரையில் மணலால் சுவாமி பூடம் செய்து சூடம் ஏற்றி வழிபட்டு சென்றனர்.

நடை திறப்பு

இந்த நிலையில் தை திருநாளை முன்னிட்டு கோவிலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.

பின்னர் காலையில் தை மாதப்பிறப்பு உத்திராயண புண்ய காலத்தை முன்னிட்டு சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து உச்சிகால அபிஷேகம், பகல் 12 மணிக்கு உச்சிகால தீபாராதனை, மாலை 5 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

நாளை, பரிவேட்டை

நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், பகல் 12 மணிக்கு உச்சிகால தீபாராதனை நடக்கிறது. மாலையில், சுவாமி அலைவாயுகந்தபெருமான் பரிவேட்டைக்காக வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள வேட்டை வெளி மண்டபத்திற்கு செல்கிறார். அங்கு பரிவேட்டை நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து சுவாமி ரதவீதி, சன்னதித்தெரு வழியாக கோவிலை சேர்கிறார்.

திருச்செந்தூர் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆவுடையப்பன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்