அய்யங்கார்குளம் சஞ்ஜீவிராயர் சாமி கோவிலை பராமரிக்க பக்தர்கள் கோரிக்கை

அய்யங்கார்குளம் சஞ்ஜீவிராயர் சாமி கோவிலை பராமரிக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-05-27 09:31 GMT

காஞ்சீபுரத்தை அடுத்த அய்யங்கார்குளம் பகுதியில் புகழ் பெற்ற சஞ்ஜீவிராயர் சாமி கோவில் அமைந்துள்ளது. ராம, ராவண யுத்தத்தில் லட்சுமணன் மயக்கம் அடைந்தபோது, லட்சுமணனுக்காக அனுமன் சஞ்சீவி மலையை தூக்கி சென்றபோது இந்த இடத்தில் சிறிது நேரம் இளைப்பாறியதாக பக்தர்களால் நம்பப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் மூலவராக ஆஞ்சநேயர், ராமன், சீதை, லட்சுமணன் சன்னதிகள் தனியாக உள்ளன.

3 ராஜகோபுரம், 3 பிரகாரங்களுடன் அமைந்துள்ள இந்த கோவிலின் எதிரில் காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் சித்ரா பவுர்ணமி தினத்தன்று பூமிக்கடியில் எழுந்தருளி அருள்பாலிக்கும் புகழ்பெற்ற நடவாவி கிணறு உள்ளது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த சஞ்சீவிராயர் சாமி கோவில் முறையாக பராமரிக்கப்படாமல் சிதிலமடைந்து காணப்படுகிறது. மேலும் பிரகாரங்களில் செடி, கொடிகள் முளைத்துள்ளன. மேலும் சில இடங்களில் கற்கள் பெயர்ந்து விழும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் ஒரு சிலர் கோவில் பிரகாரத்தில் மது குடித்தல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாகவும், இதனால் பக்தர்கள் வருகையும் குறைந்துள்ளதாக அந்த பகுதி பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

எனவே, சஞ்சீவிராயர் சாமி கோவிலை முறையாக பராமரிக்க இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்