ஆடிக்கிருத்திகை - திண்டிவனத்தில் மிளகாய் பொடி அபிஷேகம் மேற்கொண்ட பக்தர்கள்...!

திண்டிவனத்தில் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு பக்தர்கள் மிளகாய் பொடி அபிஷேகம் மேற்கொண்டு நேர்த்திக்கடனை செலுத்தினர்.

Update: 2022-07-23 15:25 GMT

திண்டிவனம்,

தமிழக முழுவதும் முருகருக்கு உகந்த நாளான ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரத்தில் ஆடி கிருத்திகை திருவிழா வெகு விமரிசையாக பக்தர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கிடங்கல் கோட்டையில் எழுந்தருளி உள்ள அருள்மிகு அறம் வளர்த்த நாயகி உடனுறை அன்பநாயக ஈஸ்வரர் திருக்கோவிலில் உள்ள அருள்மிகு வள்ளி தெய்வயானை உடனுறை ஆறுமுகப்பெருமானுக்கு 56-ஆம் ஆண்டு ஆடி கிருத்திகை விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

இதில் பக்தர்கள் பால்காவடி செடல், பூந்தேர் மற்றும் வேல்பூஜை உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை முருகப்பெருமானுக்கு நிவர்த்தி செய்தனர். இந்நிகழ்வில் முக்கிய நிகழ்ச்சியான மிளகாய் பொடி அபிஷேகத்தில் 20-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு மிளகாய் பொடி அபிஷேகம் செய்து கொண்டு முருகருக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மேலும் 100-க்கும் மேற்பட்டோர் அலகுகள் குத்தியும், வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களை இழுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் கிடங்கல் கோட்டை கிராமம் மற்றும் திண்டிவனம் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு இறையருள் பெற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்