பக்தர் மாரடைப்பால் மரணம்

பழனி முருகன் கோவிலுக்கு வந்த பக்தர் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

Update: 2023-05-27 16:24 GMT

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 55). இவர், தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று பழனி முருகன் கோவிலுக்கு வந்தார். அடிவாரத்தில் இருந்து படிப்பாதை வழியாக மலைக்கோவில் செல்ல அவர்கள் முடிவு செய்தனர். அதைத்தொடர்ந்து சேகர் மற்றும் அவரது குடும்பத்தினர் பாதவிநாயகர் கோவில் பகுதியில் இருந்து படிப்பாதை வழியாக நடந்து சென்றனர். சிறிது தூரம் சென்றதும், திடீரென சேகருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. அதையடுத்து அவரது உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் அங்கு வந்த ஆம்புலன்சில் ஏற்றி அவர் பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சேகர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பழனி அடிவாரம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். அதில், மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்தார் என தெரியவந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு படிப்பாதை வழியாக சென்ற முதியவர் ஒருவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்நிலையில் நேற்று பக்தர் ஒருவர் நெஞ்சுவலியால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே பழனி முருகன் கோவிலுக்கு தரிசனத்துக்கு வரும் வயது முதிர்ந்த பக்தர்களுக்கு ரோப்கார், மின்இழுவை ரெயிலில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்