தூத்துக்குடியில்பகுதிசபாவில் மக்கள் கோரிக்கை அடிப்படையில்ரூ.41 கோடி செலவில் வளர்ச்சி பணிகள்: மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

தூத்துக்குடியில்பகுதிசபாவில் மக்கள் கோரிக்கை அடிப்படையில்ரூ.41 கோடி செலவில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Update: 2022-11-30 18:45 GMT

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில், பகுதிசபாவில் பொதுமக்கள் அளித்த கோரிக்கைகளை ஏற்று ரூ.41 கோடி மதிப்பிலான வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநகராட்சி கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம் நேற்று மாநகராட்சி கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார். துணை மேயர் ஜெனிட்டா, ஆணையாளர் சாருஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடத்தப்பட்ட பகுதி சபா கூட்டத்தில் பொதுமக்கள் தெரிவித்த கோரிக்கைள் பரிசீலனை செய்யப்பட்டு, முன்னுரிமை அடிப்படையில் முதல்கட்டமாக ரூ.5 கோடியே 53 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பில் புதிய எல்.இ.டி விளக்குகள் அமைத்தல், ரூ.5 கோடியே 56 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் தெருவிளக்குகள் அமைத்தல், ரூ.2 கோடியே 46 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பில் குடிநீர் திட்ட பணிகள் செயல்படுத்துதல், ரூ.4 கோடியே 29 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் மண் சாலையை தார் சாலையாக மேம்படுத்துதல், ரூ.1 கோடியே 83 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைத்தல், ரூ.1 கோடியே 21 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளுதல், ரூ.12 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பில் சிறுபாலம் அமைக்கும் பணி, தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.20 கோடியில் சாலைகள் அமைத்தல் உள்பட மொத்தம் ரூ.41 கோடியே 2 லட்சம் மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சீல் வைப்பு

கழிவுநீர் கால்வாய் அமைக்காமல் சாலை அமைக்கப்பட உள்ளது. ஆகையால் முதலில் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும், கவுன்சிலர்களுக்கு அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பல கடைகளுக்கு சீல் வைக்கிறார்கள். கடைகளுக்கு உரிய அனுமதி பெறாமல் கட்டும் போதே மாநகராட்சி தடுத்து நிறுத்தி இருக்க வேண்டும். அதனைவிடுத்து தொழில் நடந்து வரும் போது, அந்த கடைகளுக்கு சீல் வைக்கிறார்கள். இதனால் மக்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்ணாநகர் பகுதியில் ஒரு கடைக்கு தீர்வை செலுத்துவதற்காக விண்ணப்பித்தால், அந்த கடைக்கு சீல் வைக்கிறார்கள். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசும் போது, டூவிபுரம் மேற்கு என்று இருப்பதை அண்ணாநகர் என்று மாற்றுவதற்காக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாநகராட்சியில் பழுதடைந்த சாலைகள் உடனடியாக சரி செய்யப்படும். மாநகராட்சி பகுதியில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு முறையாக கட்டிட அனுமதி பெறப்படுகிறது. அதே நேரத்தில் பழைய கட்டிடங்கள் ஒழுங்கு படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பல கட்டிடங்கள் முறையாக அனுமதி பெறாமல் கட்டிடம் கட்டி உள்ளனர். திருமண மண்டபங்களிலும் வாகன நிறுத்தும் வசதி இல்லாத நிலை உள்ளது. அதற்காக நோட்டீசு கொடுத்து உரிய வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று கூறினார்.

ஒத்துழைப்பு

கூட்டத்தில் அதிகாரிகள் கூறும் போது, முறையாக அனுமதி பெறாத வணிக நிறுவனங்கள் பொதுமக்களுக்கு பாதிப்பு உள்ள கட்டிடங்களை சீல் வைத்து உள்ளோம். அண்ணாநகரில் வீடு கட்டுவதற்கு அனுமதி பெற்று உள்ளார்கள். அதில் கடை கட்டும் போது, அதற்கு பிளான் அனுமதி பெற வேண்டும். அதன்பிறகு தான் தீர்வை செலுத்த வேண்டும். மாநகராட்சியில் முறையாக அனுமதி பெற்று கட்டிடங்கள் கட்ட வேண்டும் என்ற விழிப்புணர்வு பொதுமக்களுக்கு வர வேண்டும் என்பதற்காகத்தான் நடவடிக்கை எடுக்கிறோம். இதற்கு கவுன்சிலர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூறினார்.

கூட்டத்தில் செயற்பொறியாளர் அசோகன், உதவி செயற்பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ், ரெங்கநாதன், உதவி ஆணையர்கள் காந்திமதி, சேகர் மற்றும் அலுவலர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்