பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி, குருபூஜை விழா நாளை தொடங்குகிறது

பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நாளை தொடங்குகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வருவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் ெசய்யப்பட்டுள்ளன.

Update: 2023-10-26 18:45 GMT

கமுதி, 

தேவர் ெஜயந்தி-குருபூஜை

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் 116-வது ஜெயந்தி மற்றும் 61-வது குருபூஜை விழா நாளை (28-ந் தேதி) தொடங்கி 3 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் 28-ந் தேதி தேவரின் ஆன்மிக விழாவாகவும், 29-ந் தேதி அரசியல் விழாவாகவும், 30-ந் தேதி குருபூஜையாகவும் நடக்க இருக்கிறது.

நாளை காலை 6 மணி அளவில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவாலயம் சார்பில் நினைவாலய பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜன் தலைமையில் பழனி, தங்கவேல் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் சிறப்பு பூஜைகளும், யாகசாலை பூஜைகளும் நடைபெறுகின்றன..

பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் முன்னிலையில் பூஜை நடத்தப்பட்டு, விழா தொடங்குகிறது. தொடர்ந்து தேவர் பக்தர்கள், சமுதாய பிரமுகர்கள், சமுதாய தலைவர்கள் வழிபடுகிறார்கள்.

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் முன்னிலையில் தேவரின் வாழ்க்கை வரலாறு அடங்கிய புகைப்பட கண்காட்சி திறந்து வைக்கப்படுகிறது.

29-ந் தேதி தேவரின் அரசியல் விழா நடைபெறுகிறது. அதன்படி தேவரின் வாழ்க்கை-வரலாறு குறித்த ஆன்மிக சொற்பொழிவுகள் நடைபெறும்.

முதல்-அமைச்சர்

30-ந் தேதி தேவரின் குருபூஜையைெயாட்டி காலை 6 மணி அளவில் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் தலைமையில் பழனி தங்கவேல் முன்னிலையில் யாகசாலை பூஜை நடைபெறும். தொடர்ந்து அரசு விழா நடைபெறும்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், கே.ஆர்.பெரியகருப்பன், சாமிநாதன், கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், சக்கரபாணி, மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், எம்.எல்.ஏ.க்கள் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், முருகேசன் மற்றும் பலர் தேவர் நினைவிடத்தில் மலர் மாலை அணிவித்து வணங்குகின்றனர்.

பல்வேறு கட்சி தலைவர்கள்

அ.தி.மு.க. சார்பில் பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில், முன்னாள் அமைச்சர்கள் மரியாதை செலுத்துகின்றனர்.

அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, ம.தி.மு.க. சார்பில் வைகோ, தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ, காங்கிரஸ் சார்பில் மாநில தலைவர் அழகிரி, பா.ம.க. சார்பில் தலைவர் அன்புமணி ராமதாஸ், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், தென்னாட்டு மக்கள் கட்சி நிறுவன தலைவர் கணேஷ் தேவர், முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் தேவர், பார்வேர்டு பிளாக் மாநில தலைவர் பி.வி.கதிரவன் உள்பட அனைத்து கட்சி பிரமுகர்களும் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகின்றனர்.

முன்னேற்பாடு பணி

இந்த விழாவை முன்னிட்டு முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் வந்து செல்லும் வழித்தடங்கள், கண்காணிப்பு கேமராக்கள் அமைத்தல், வாகன சோதனை மையங்கள் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் பசும்பொன்னில் இருந்து கோட்டைமேடு, மின்சார வாரிய அலுவலகம் வரை அவசர வழிச்சாலை தமிழ்நாடு கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.86 லட்சத்தில் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டுள்ளதால் துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேவர் குருபூஜை விழாவுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை, கமுதி துணை சூப்பிரண்டு மணிகண்டன் ஆகியோர் கண்காணித்து வருகிறார்கள்.


Tags:    

மேலும் செய்திகள்