மரணத்தில் தள்ளும் மனஅழுத்தம்- மருத்துவ நிபுணர்கள் கருத்து

மரணத்தில் தள்ளும் மனஅழுத்தம்- மருத்துவ நிபுணர்கள் கருத்து

Update: 2023-07-16 20:52 GMT

கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை ஏற்படுத்திய அதிர்வலை இன்னும் அடங்கவில்லை. இளம் வயதில் உயர் பொறுப்பில் இருந்த ஒருவர், வாழ்வில் தனது இலக்கு பற்றி தெளிவாக இருந்த ஒருவர், தன்னைத்தானே செதுக்கி உயர்ந்த ஒருவரின் இந்த விபரீத முடிவு, வேதனைக்கு இணையாக வியப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

டி.ஐ.ஜி. விஜயகுமார், 'அப்சசிவ் கம்பல்சிவ் டிசாடர்' (ஓ.சி.டி.) எனப்படும் மனஅழுத்த பிரச்சினையால் அவதிப்பட்டு வந்திருக்கிறார். அதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார். தனது பிரச்சினை குறித்து நெருங்கிய வட்டத்தில் பேசவும் செய்திருக்கிறார். ஆனால் ஒரு காலை வேளையில், யாரும் எதிர்பாராத நேரத்தில் எல்லாம் முடிந்துவிட்டது.

டி.ஐ.ஜி. விஜயகுமாரின் பணியிலோ, குடும்பத்திலோ பெரிதாக எந்த பிரச்சினையும் தெரியாத நிலையில், மனஅழுத்தம்தான் அவருக்கு மரணத்தை கொண்டுவந்துவிட்டது.

மறைந்திருந்து தாக்கும் இந்த மனஅழுத்தமே அடுத்த 10 ஆண்டுகளில், வேறு எந்த வியாதியையும் விடவும் நாடுகளுக்கு பெரும் சுமையாக மாறும் என்று கூறுகிறது உலக வங்கி.

முன்வரிசையில் இந்தியா

நமது இந்தியா, இப்போதே உலகின் மனஅழுத்த தலைநகரமாக திகழ்கிறது என்பது மிகைப்படுத்தல் இல்லாத செய்தி.

இந்தியாவில் இப்போது 3-ல் ஒருவருக்கு மனஅழுத்த அறிகுறிகள் இருக்கின்றன என்றால், நிலைமையின் தீவிரம் புரியும். உலகிலேயே மனஅழுத்த பிரச்சினை கொண்டோர் எண்ணிக்கை இந்தியாவில்தான் அதிகம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை ஒலி எழுப்புகிறது.

லான்செட் உளவியல் இதழில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான 'இந்திய மாநிலங்களில் மனநல பிரச்சினைகளின் சுமை' கட்டுரையின்படி, 2017-ம் ஆண்டளவில் நாட்டில் சுமார் 20 கோடி பேர் பல்வேறு மனநல பாதிப்புகளுக்கு உள்ளாகியிருந்தனர். அதாவது 7 பேரில் ஒருவர் அல்லது மொத்த மக்கள்தொகையில் 14.3 சதவீதம் பேர்.

சர்வதேச அளவில் என்று பார்த்தால், 30 கோடிக்கு மேற்பட்டோர், மனஅழுத்தத்தால் அல்லல்பட்டு வருகின்றனர். ஒருவர் இயல்பாக பேசுகிறார், சிரிக்கிறார், அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்கிறார் என்பதால் அவருக்கு மன அழுத்த பாதிப்பு இல்லை என்பதில்லை. வசதியில், சமூக அந்தஸ்தில் உயர்நிலையில் இருக்கிறார் என்பதற்காக மனநல பிரச்சினை இருக்காது என்று கூறுவதற்கில்லை.

ஆழ்கடலுக்குள் உள்ள எரிமலையாக அது எவருக்குள்ளும் வெளித்தெரியாமல் அமைதி காக்கக்கூடும். என்றாவது ஒருநாள் திடீரென அது வெடிக்கக்கூடும்.

உரிய நேரத்தில் கவனிக்கப்பட்டு, முறையான சிகிச்சை அளிக்கப்படாத மனஅழுத்தம் முற்றலாம், விபரீத விளைவுகளுக்கு இட்டுச் செல்லலாம். கடும் மனஅழுத்தத்துக்குள்ளான நபரால், அவருக்கு நெருங்கியவர்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்றாலும், சுயஅபாயத்துக்கான வாய்ப்பே அதிகம். தன்னைத்தானே மரண பள்ளத்தாக்கில் தள்ளிவிடச் செய்துவிடக்கூடும்.

மனஅழுத்தத்துக்கு உள்ளான அனேகம் பேர் தங்களுக்கு தற்கொலை எண்ணம் வந்து சென்றதை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். தாமே உயிரை மாய்த்துக்கொண்டவர்களில் 18 சதவீதம் பேர், ஏற்கனவே அதற்கான முயற்சிகளில் தோல்வி கண்டவர்கள் என்கிறது ஒரு புள்ளிவிவரம்.

மாறிவரும் சமூக, பொருளாதார சூழ்நிலை, மனஅழுத்தத்துக்கு ஒரு மிகப்பெரிய காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை. குடும்பம், படிப்பு, வேலையில் அதிகரித்துக்கொண்டே செல்லும் சவால்கள் ஒரு சாதாரண மனிதனை மூச்சுத்திணற செய்கின்றன. பலர், வெளியே தெரியாமல் உள்ளுக்குள் அலறி கொண்டிருக்கிறார்கள். யாராவது ஒருவர் தமக்கு ஆறுதல் கரம் நீட்ட மாட்டார்களா என்று தவித்துக்கொண்டிருக்கிறார்கள்.

மூத்தவர்கள் ஆறுதல்

முன்பெல்லாம் குடும்பத்தில் ஒருவர் சுணங்கும்போதும், துவளும்போதும் அவர்களை தேற்றவும், ஆற்றுப்படுத்தவும் மூத்தவர்கள் இருந்தார்கள். அவர்கள் அரிய இனமாகிவிட்ட இன்றைய நிலையில், அந்த இடத்தை சமூக ஊடகங்கள் எடுத்துக்கொள்ள முயல்கின்றன. அவற்றில் அள்ளிவிடப்படும் அறிவுரைகளில் எத்தனை உத்தமமானவை என்பது அலசலுக்குரிய விஷயம். இன்று பொதுவாக எல்லா விஷயங்களிலும் விழிப்புணர்வு அதிகரித்திருக்கிறது. அவற்றுடன் ஒப்பிடும்போது, மனம் சார்ந்த விஷயங்கள், பிரச்சினைகள் குறித்த புரிதல் குறைவுதான். எங்கே தனக்கு இந்த மாதிரி அடிக்கடி தோன்றுகிறது, பிரச்சினை உள்ளது என்று பேசினால் தன்னை தவறாக எண்ணிவிடுவார்களோ என்ற பயம், கூச்சம், தயக்கம் பலருக்கு இருக்கிறது. அதற்கு அவசியமில்லை, பிற உடல்நல பிரச்சினைகளைப் போல இதுவும் ஒரு பிரச்சினைதான், சரிப்படுத்தக்கூடியதுதான் என்ற தெளிவு ஏற்பட வேண்டும். தங்களின் நம்பிக்கைக்கு உரியவர்களிடம் அல்லது தகுதிவாய்ந்த நபரிடம் மனம் திறக்க வேண்டும்.

குடும்பத்தினர், நண்பர்களும், தங்கள் அன்புக்குரியவர்கள், நெருங்கியவர்களின் அன்றாட செயல்பாடுகள், நடத்தையில் ஏற்படும் மாற்றத்தை கவனித்து, கனிவோடு அணுகி, இயல்புக்கு திரும்ப உதவ வேண்டும்.

இனம்புரியாத சோகம், விரும்பிச் செய்யும் செயல்களில் குறையும் ஆர்வம், சோர்வு, அன்றாட நடவடிக்கைகளில் தடுமாற்றம், ஞாபகமறதி போன்றவை மனஅழுத்தத்தின் அறிகுறிகளாக இருக்கலாம். சோர்வு, பசியுணர்வில் மாற்றம், அதிகரிக்கும், குறையும் தூக்கம், படபடப்பு, பதற்றம், கவனக்குறைவு, முடிவெடுக்க இயலாமை, தகுதியற்றவராகவோ, குற்ற உணர்வாகவோ உணர்தல், நம்பிக்கையற்ற நிலை, தன்னைத்தானே வருத்திக்கொள்ளுதல் போன்றவையும் கவனிக்க வேண்டியவை.

மன பாதிப்புகளைப் போல, செரட்டோனின், டோபமைன் போன்ற 'இயக்குநீர்' (ஹார்மோன்) சுரப்பு குறைபாடும் மனநலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தலாம், பிற உடல்நல பாதிப்புகளைப் போல இதையும் உரிய சிகிச்சையின் மூலம் குணப்படுத்தலாம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

எல்லா விஷயங்களையும் போல மனஅழுத்தத்தையும் முற்றிலும் தவிர்க்க முடியாது. ஆனால் இவ்விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலம், பல இன்னுயிர் இழப்புகளைத் தடுக்கலாம். இதுவும் ஒரு தனிமனித, சமூக கூட்டுப்பொறுப்புதான்.

இன்றைய சமுதாயத்தில் மனஅழுத்தம் அதிகரித்திருக்கிறதா? என்பது குறித்து மனநல மருத்துவ நிபுணர்கள் மட்டும் அல்லாது, வேறு சிலரிடமும் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் கூறியதாவது:-

தவிர்க்க வேண்டும்

கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகம் பேராசிரியர் டாக்டர் பி.பூர்ண சந்திரிகா கூறும்போது, 'மனவியாதி என்பது எப்போது வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இதில் வயது வித்தியாசம் எதுவும் கிடையாது. வீட்டில் பெற்றோர்களுக்கு மனவியாதி இருந்தால் அவர்களுடைய குழந்தைகளுக்கு சூழ்நிலைகளுக்கு ஏற்ப வருவதற்கான கூடுதல் வாய்ப்புகள் உள்ளன. அதேபோல் போதைப்பொருட்களை பயன்படுத்தினால் மனஅழுத்தம் குறையும் என்ற தவறான நினைப்பில் அதனை பயன்படுத்தினால் அதனால் எதிர்விளைவுதான் ஏற்படும். இதனால் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்' என்றார்.

சிகிச்சை

ஈரோடு அரசு ஆஸ்பத்திரி மனநல பிரிவு டாக்டர் ஜெயபிரகாஷ்:-

மன நோய் பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. ஆனால் பாதிப்புக்கு உள்ளாகிறவர்கள், அவர்கள் மட்டுமின்றி குடும்பத்தினரையும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறார்கள். மனநல பாதிப்பு ஒரு குறிப்பிட்ட வயது மட்டுமின்றி அனைவரையும் பாதிக்கிறது. மன அழுத்தம் முதல் காரணமாக உள்ளது.

ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் மனநல பிரச்சினைக்கு தீர்வு காண சிறப்பு பிரிவும், தேர்ந்த மருத்துவ குழுவும் உள்ளது. இங்கு தினசரி ஏராளமானவர்கள் வருகிறார்கள். அதில் பெரும்பாலானவர்கள் கடுமையான பாதிப்புக்கு பின் வருகிறார்கள். அவர்களுக்கு ஆற்றுப்படுத்துதல் ஆலோசனை மட்டுமின்றி, மருந்தும் தேவைப்படுகிறது. தொடர்ச்சியாக 3 முதல் 6 மாதங்கள் வரை சிகிச்சை பெற்றால் குணப்படுத்த முடியும். ஆனால் சிலர் ஒருமாத சிகிச்சையில் சற்று குணமானதும் சிகிச்சையை விட்டு விடுவார்கள். இது தவறாகும்.

சுற்றுச்சூழல் மாற்றம்

மனநல பாதிப்பின் தொடக்கத்தில் ஆலோசனை மையங்களின் மூலம் கவுன்சிலிங் பெற்றால் எளிதில் குணம் அடைந்து விடலாம். அது மட்டுமின்றி மன அழுத்தத்துக்கு ஆளாகி வருபவர்களை அப்படியே விட்டுவிடாமல் அவர்களுக்கு பிடித்த இடங்களுக்கு அழைத்து செல்வது. ஒன்றாக அமர்ந்து பேசுவது, பிடித்த உணவு சமைத்து தருவது. குடும்பமாக உணவகங்களுக்கு செல்வது என்று சுற்றுச்சூழல் மாற்றங்கள் செய்ய வேண்டும். இனிமேல் யாருக்கும் மனநல பாதிப்பு, மனச்சிதைவு ஏற்படாமல் இருக்கவும், பாதிக்கப்பட்டவர்களை மீட்கவும் உறுதி ஏற்க வேண்டும். இதற்கு அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பும் வேண்டும்.

எளிய உடற்பயிற்சி

ஈரோடு அருகே உள்ள நாதகவுண்டன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கூட ஆசிரியர் தே.தாமஸ் ஆண்டனி:-

நமக்கு மனநலம் பாதிப்படைகிறது என்கிற நிலையை உணரும்போது தகுந்த மனநல ஆலோசகரை அணுக வேண்டும். தியானம், இறை வழிபாடு, மெல்லிசை பாடல்களை கேட்பது, அசைவ உணவை முடிந்த வரை தவிர்த்துவிட்டு காய்கறி, பழம் ஆகியவற்றை அதிக அளவில் உணவில் சேர்த்து கொள்ளுதல், எளிய உடற்பயிற்சி செய்வது போன்றவற்றை நமது அன்றாட வாழ்வுடன் இணைத்து கொள்வதால் மனஅழுத்தம் இருக்காது. குழந்தைகளுடன் மகிழ்ச்சியுடன் நேரத்தை செலவிடவும் செய்யலாம்.

சமூக சேவை

ஈரோடு கலை அறிவியல் கல்லூரி பேராசிரியை ரா.பாக்கியலட்சுமி:-

வேலை பார்க்கும் இடத்திலும், வீட்டிலும் ஏதாவது ஒரு பிரச்சினை வந்து கொண்டு தான் இருக்கும். அதற்கெல்லாம் வருத்தப்படாமல் பிரச்சினையை தீர்வு காண முடிவு எடுக்க வேண்டும். குறிப்பாக நாம் ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டே இருந்தால், மனஅழுத்தம் ஏற்படுவதை தவிர்க்கலாம். நமது வேலையை தவிர்த்து அதிக நேரம் கிடைக்கிறது என்றால், ஏதாவது ஒரு சிந்தனை ஏற்படும். அதை தவிர்க்க படிப்பது, விளையாடுவது, சமூக சேவை செய்வது போன்று ஏதாவது ஒன்று செய்யலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்