வன்னியர் இடஒதுக்கீடு குறித்து பேச அனுமதி மறுப்பு; சட்டசபையில் இருந்து பா.ம.க. வெளிநடப்பு

வன்னியர் இடஒதுக்கீடு குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதால் சட்டசபையில் இருந்து பா.ம.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Update: 2023-04-12 23:08 GMT

சென்னை,

சட்டசபையில் நேற்று நேரம் இல்லாத நேரத்தில் பா.ம.க. உறுப்பினர் ஜி.கே.மணி எழுந்து நின்று, ஒரு பிரச்சினை தொடர்பாக பேச முயன்றார். அப்போது சபாநாயகர், 'நீங்கள் இன்றைக்கு தான் அந்த விஷயம் குறித்த தகவல்களை கொடுத்திருக்கிறீர்கள். அதை வேறு நாள் நான் எடுத்துக்கொள்கிறேன்' என்று தெரிவித்தார்.

ஆனால் பா.ம.க. உறுப்பினர் ஜி.கே.மணி மற்றும் பா.ம.க. உறுப்பினர்கள் எழுந்து நின்று பேசிக்கொண்டே இருந்தனர்.

அப்போது குறுக்கிட்ட அவை முன்னவர் துரைமுருகன், 'உங்கள் பிரச்சினை குறித்து அவர் எடுத்துக்கொள்ள மாட்டேன் என்று சொல்லவில்லை. நாளை எடுத்துக்கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார். எனவே நீங்கள் அமருங்கள்' என்றார்.

ஆனாலும் பா.ம.க. உறுப்பினர்கள் எழுந்து நின்று கொண்டிருந்தனர். உடனே சபாநாயகர், 'இது அரசியல் செய்வதற்கான இடம் இல்லை. உங்களுக்கு நாளைக்கு வாய்ப்பு தருகிறேன்' என்று சொல்லி இருக்கிறேன். நீங்கள் மூத்த உறுப்பினர்கள் உங்களுக்கு சபை நடவடிக்கை தெரியும். உட்காருங்கள்' என்றார்.

வெளிநடப்பு

அந்த நேரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை மாநகர காவல் திருத்த சட்ட மசோதா ஒன்றை தாக்கல் செய்து பேச தொடங்கினார். அந்த நேரத்திலும் பா.ம.க. உறுப்பினர்கள் எழுந்து நின்று பேசிக்கொண்டிருந்தார்கள்.

இதை பார்த்ததும் அவை முன்னவர் துரைமுருகன், 'இது அவை நடவடிக்கைக்கு உகந்ததல்ல, முதல்-அமைச்சர் பேசும்போது இவ்வாறு இடையூறு செய்யக்கூடாது. நீங்கள் (சபாநாயகர்) நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார். அதன் பின்னர் இருக்கையில் அமர்ந்த பா.ம.க. உறுப்பினர்கள். சிறிது நேரத்தில் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

ஜி.கே.மணி பேட்டி

இதுகுறித்து சட்டமன்ற பா.ம.க. குழு தலைவர் ஜி.கே.மணி கூறுகையில், 'வன்னியர்களுக்கான உள் இடஒதுக்கீடு குறித்து பரிந்துரைப்பதற்கு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு மேலும் 6 மாத கால நீட்டிப்பை தமிழக அரசு வழங்கியுள்ளது. அரசின் இந்த நடவடிக்கை, ஒட்டுமொத்த வன்னியர்களுக்கும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

இதுகுறித்து பேச அனுமதிக்காததை கண்டித்தும், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை உடனடியாக வழங்க வலியுறுத்தியும் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளோம்' என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்