டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளது
தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கை காரணமாக டெங்கு பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
கோவை சின்னவேடம்பட்டி பகுதியில், டெங்கு மற்றும் மழைக்கால நோய்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாடு முழுவதும் டெங்கு போன்ற மழைக்கால நோய் தடுப்பு முகாம்கள் ஆயிரம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த எண்ணிக்கை 1,300 முகாம்களாக உயர்ந்துள்ளது. கோவையை பொறுத்த வரை 107 இடங்களிலும், சேலத்தில் 189 இடங்களிலும், மதுரையில் 129 இடங்களிலும், சென்னையிலும் திருச்சியிலும் தலா 45 இடங்களிலும், நீலகிரியில் 12 இடங்களிலும் என்று மாவட்ட வாரியாக இந்த முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம்கள் மூலம் பல்லாயிரக்கணக்கானோர் பலன் பெற்று வருகின்றனர்.
டெங்கு, ப்ளூ போன்ற காய்ச்சல்கள் உறுதி செய்யப்பட்ட இடங்களில் இந்த முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. கோவையில் நடைபெற்ற முகாம்களில் 2,354 பேர் பயன் பெற்றிருக்கிறார்கள்.
தமிழகத்தில் டெங்குவிலிருந்து மக்களை காப்பாற்ற அரசு எடுத்துவரும் நடவடிக்கை காரணமாக டெங்கு போன்ற நோய்கள் கட்டுக்குள் இருக்கிறது. ஜனவரி 1-ந் தேதி முதல் நேற்று வரை 5,354 பேருக்கு டெங்கு பாதிப்பு இருந்துள்ளது. தற்போது 363 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். கோவையில் 10 பேர் டெங்கு பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அந்தந்த மாவட்ட நிர்வாகங்களும் உள்ளாட்சி நிர்வாகங்களும் முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலின் பேரில் ஒருங்கிணைந்த பல்வேறு பணிகளை செய்து கொண்டிருக்கின்ற காரணத்தினால் இந்த ஆண்டு அக்டோபர் வரை 4354 பேர் என்கின்ற அளவில் பாதிப்பு இருக்கிறது. மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 2012-ம் ஆண்டு 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டு அதில் 13 பேர் உயிரிழந்தனர். அதற்கு அடுத்து 2017-ம் ஆண்டு 23 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்புக்குள்ளாகி 65 பேர் மரணம் அடைந்தனர். இந்த இரண்டு ஆண்டுகள் தான் அதிகபட்ச இறப்புகள் தமிழகத்தில் பதிவானது. மற்ற ஆண்டுகளில் ஓர் இலக்க பாதிப்பு தான் பதிவானது. அதுவும் இல்லாத நிலை இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழை முடியும் வரை இந்த முகாம்கள் நீட்டிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.