தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

“தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது” என்று தூத்துக்குடியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

Update: 2023-09-28 20:51 GMT

தூத்துக்குடி,

தமிழகத்தில் 6 லட்சத்து 21 ஆயிரத்து 796 குப்பிகள் நாய்க்கடி மருந்தும், 35 ஆயிரத்து 502 குப்பிகள் ஹீமோ குளோரோபில் மருந்தும், 1 லட்சத்து 7 ஆயிரத்து 87 பாம்புக்கடி மருந்தும் இருப்பு உள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் இந்த மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டதால் கடந்த 2 ஆண்டுகளில் நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட 60 ஆயிரத்து 380 பேரும், பாம்பு கடியால் பாதிக்கப்பட்ட 14 ஆயிரத்து 484 பேரும் காப்பாற்றப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் தற்போது 424 ஆரம்ப சுகாதார நிலையங்களில் சளி மாதிரி பரிசோதனை செய்யும் கருவிகள் வைக்கப்படுகிறது. விரைவில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் வைக்கப்படும்.

டெங்கு காய்ச்சல்

தமிழகத்தில் பருவமழை காலங்களில் 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். கடந்த 2012-ம் ஆண்டு 13 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு 26 பேர் இறந்தனர். 2017-ம் ஆண்டு 23 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு 65 பேர் இறந்தனர். கடந்த ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் நேற்று வரை 4 ஆயிரத்து 454 பேர் டெங்கால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்போது ஆஸ்பத்திரிகளில் 390 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3 பேர் உயிரிழந்து உள்ளனர். அரசின் தொடர் நடவடிக்கையால் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள மருத்துவ பணியாளர்கள் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக கோர்ட்டில் சில வழக்குகள் உள்ளன. அந்த வழக்கில் தீர்வு பெறப்பட்டதும் பணியிடங்கள் நிரப்பப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் 30 சதவீதம் மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளது" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்