டிரைவர்களுக்கு நலவாரியம் அமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
டிரைவர்களுக்கு நலவாரியம் அமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆவூர்:
மாநில அளவிலான சமூக நீதி அனைத்து வாகன ஓட்டுனர்கள் தொழிற்சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட கிளை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி, புதுக்கோட்டை சாலையில் உள்ள தொண்டைமான்நல்லூர் சுங்கச்சாவடி அருகே நேற்று மாவட்ட அளவிலான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் தியாகராஜன் என்ற சேகர் தலைமை தாங்கினார். சங்கத்தின் மாவட்ட செயலாளர் கந்தர்வகோட்டை அழகுபிரகாஷ் முன்னிலை வகித்தார். இதில் டிரைவர்கள் கருப்பு பட்டை அணிந்து, தங்களது வாகனத்தில் கருப்பு கொடியை கட்டியவாறு வந்து கருப்பு கொடியேந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் டிரைவர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும். அனைத்து சுங்கச்சாவடிகளின் அருகே அரசு மருத்துவமனை அமைக்க வேண்டும். ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிக்கும்போது டிரைவர்களுக்கு காப்பீடு சேர்த்து வழங்க வேண்டும். அத்திப்பள்ளி சோதனை சாவடியை அகற்ற வேண்டும். பைக் டாக்சியை ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளையும் அகற்ற வேண்டும். தனியார் வாகனங்களை மறித்து லஞ்சம் வாங்கும் அரசு அலுவலர்கள், அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தினர். முடிவில் புரட்சி விழிகள் ஓட்டுனர் சங்க புதுக்கோட்டை மாவட்ட தலைவர் கருணாகரன் நன்றி கூறினார்.