மாற்று இடம் வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம்
மேல்விஷாரத்தில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற மாற்று இடம் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேல்விஷாரத்தில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற மாற்று இடம் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆக்கிரமிப்பு அகற்றம்
ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் பாலாற்றங்கரையை ஒட்டி சாதிக் பாஷா நகர், கலைஞர் நகர், எம்.ஜி.ஆர். நகர் ஆகிய பகுதிகளில் 400-க்கும் மேற்பட்டோர் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர். நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து அதிகாரிகள் சில மாதங்களுக்கு முன்பு சாதிக் பாஷா நகரில் உள்ள வீடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வீடு கட்டி வசித்து வந்த நபர்கள் வீடுகளை இடித்து அகற்ற கால அவகாசம் கேட்டனர். மேலும் எங்களுக்கு மாற்று இடம் வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இதற்கு அதிகாரிகள் ஆற்காடு அடுத்த கூராம்பாடி பகுதியில் இடம் ஒதுக்கித் தருவதாக தெரிவித்தனர். இதனை ஏற்ற பொதுமக்கள் தாங்கள் நீர்நிலை பகுதியில் கட்டி உள்ள வீடுகளை அகற்றிக் கொள்வதாக தெரிவித்தனர். ஆனால் இதுநாள் வரையில் அவர்களுக்கு வீடு கட்ட இடம் ஒதுக்கித் தரவில்லை என கூறப்படுகிறது.
ஆர்ப்பாட்டம்
இந்தநிலையில் வருகிற 28-ந் தேதி ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக அப்பகுதி மக்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் வசித்து வரும் மக்கள் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மாற்று இடம் வழங்கக் கோரி மேல்விஷாரம் பகுதியில் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தனர். இதற்கு போலீசார் அனுமதி தரவில்லை என தெரிகிறது.
ஆனால் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக சொல்லப்பட்ட இடத்தில் நேற்று காலை அப்பகுதி மக்கள் திரண்டனர். தகவலறிந்த ஆற்காடு டவுன் போலீசார் சம்பவ இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாற்று இடம் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி கோஷமிட்டனர். தகவல் அறிந்ததும் வாலாஜா தாசில்தார் ஆனந்தன் மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது ஆற்காடு அடுத்த கூராம்பாடி பகுதியில் இடம் ஒதுக்கி தருவதாக தெரிவித்தனர். இதனை ஏற்ற பொதுமக்கள் கலைந்து சென்றனர்.