நெல்லையில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்

தி.மு.க. அரசை கண்டித்து நெல்லையில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்

Update: 2022-10-27 21:27 GMT

தி.மு.க. அரசை கண்டித்து நெல்லையில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.

பா.ஜனதா ஆர்ப்பாட்டம்

பாரதீய ஜனதா கட்சி சார்பில் நெல்லை வண்ணார்பேட்டை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாய்மொழியாம் தமிழுக்கு முடிவுரை எழுத நினைக்கும் தி.மு.க அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

நெல்லை மாவட்ட பா.ஜனதா தலைவர் தயாசங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட பொது செயலாளர்கள் டி.வி.சுரேஷ், வேல் ஆறுமுகம், முத்து பலவேசம், பாலகிருஷ்ணன், தச்சநல்லூர் தெற்கு மண்டல தலைவர் மேகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பார்வையாளர் நீலமுரளி யாதவ் பேசினார்.

நாடகம்

ஆர்ப்பாட்டத்தில் பா.ஜனதா சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியை திணிப்பதாக கூறி தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் ஏதாவது நியாயம் இருக்கிறதா?. இதை ஒவ்வொருவரும் எண்ணி பார்க்க வேண்டும். தி.மு.க. அரசு மின்கட்டணத்தை கடுமையாக உயர்த்தி உள்ளது. இதை திசை திருப்பவே தி.மு.க., இந்தி திணிக்கப்படுவதாக கூறி ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர். தி.மு.க. தமிழின் பெயரில் நாடகம் நடத்துகிறது. தமிழுக்காக அவர்கள் உண்மையாக பாடுபடவில்லை.

இலங்கையில் 1 லட்சம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அன்று மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு, அதற்கு துணை போனது தி.மு.க. தான். இனிமேல் தமிழர்களை ஏமாற்ற முடியாது.

பா.ஜனதா எதிர்க்கும்

உலகமெங்கும் தமிழின் பெருமையை பிரதமர் மோடி பேசி வருகிறார். ஆகவே தமிழகத்தில் இந்தி திணிக்கப்படாது. அவ்வாறு வந்தால் தமிழக பா.ஜனதா எதிர்க்கும்.

வருகிற 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்துக்கும் தேர்தல் வரும். அப்போது மத்தியிலும், மாநிலத்திலும் பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் நாகராஜன், இளைஞர் அணி நயினார் பாலாஜி, மாவட்ட துணைத்தலைவர்கள் முருகதாஸ், தமிழ் செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்