பதவி பிரமாணம் செய்துவைக்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம்

நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்ணுக்கு பதவி பிரமாணம் செய்துவைக்காததை கண்டித்து விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-10-06 18:45 GMT

போட்டியின்றி தேர்வு

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த மலைப்பகுதியில் அமைந்துள்ளது நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு காமனூர்தட்டு பகுதியை சேர்ந்த பாண்டியன் மனைவி இந்துமதி போட்டியிட்டார். பிற சமூகத்தினர் அதிகம் உள்ள நாயக்கனேரி ஊராட்சி தலைவர் பதவி பட்டியலின பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுப்பட்டதுடன், அவரை எதிர்த்து யாரும் போட்டியிட வில்லை. இதனால் இந்துமதி போட்டியின்றி ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

காணாமல் போனதாக புகார்

இந்துமதி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ளதால் இந்துமதி இதுவரை தலைவர் பதவி ஏற்கமுடியவில்லை. கடந்தசில நாட்களுக்கு முன்பு இந்துமதி திடீரென மாயமானார்.

இதுகுறித்து அவரது கணவர் பாண்டியன் ஆம்பூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில் காணாமல் போனதாக கூறப்பட்ட இந்துமதி போலீசில் தஞ்சம் அடைந்தார். அப்போது மன உளைச்சல் காரணமாக தர்மபுரியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றதாக தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டம்

நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்று, அதற்கான சான்றிதழ் வழங்கி 2 ஆண்டுகள் ஆகியும் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்காததை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று ஆம்பூர் நேதாஜி பஜாரில் உள்ள கிராம சாவடி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்பத்தூர் வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாசம் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தை

இதுதொடர்பாக நேற்று மாலை திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்.

அப்போது கலெக்டர் பாஸ்கரபாண்டியன், ஊராட்சி மன்ற தலைவராக பதவி பிரமாணம் செய்து வைப்பதற்கு சில சட்டப்பிரச்சினைகள் உள்ளதாகவும், இதனை விரைவில் முடிவுக்கு கொண்டுவர அரசு அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருவதாகவும் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்