சேலம், எடப்பாடியில் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்-கவர்னரை கண்டித்து கோஷமிட்டதால் பரபரப்பு

சேலம், எடப்பாடியில் கல்லூரி மாணவர்கள், கவர்னரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-01-10 21:02 GMT

சேலம்

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேசிய கருத்துக்கு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் சேலம் சட்டக்கல்லூரி மாணவர்கள் 30-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று சேலம் அரசு கலைக்கல்லூரி முன்பு கூடினர். பின்னர் அவர்கள் திடீரென தமிழ்நாடு வாழ்க மற்றும் தமிழ்நாடு என்று சொல்ல மறுக்கும் கவர்னர் ஆர்.என்.ரவியே எங்கள் மண்ணை விட்டு வெளியேறு என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்திய படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் கவர்னரை கண்டித்து கோஷமிட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த அஸ்தம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு மாணவர்கள் கலைந்து சென்றனர். கவர்னரை கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் நேற்று அரசு கல்லூரி முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

எடப்பாடி

இதே போல எடப்பாடியிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. எடப்பாடி அரசு கலைக்கல்லூரியை சேர்ந்த திரளான மாணவர்கள், தமிழக கவர்னருக்கு எதிராக கல்லூரி வாசல் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் "உரக்கச் சொல்வோம் தமிழ்நாடு என்று உரக்கச் சொல்வோம்" என்று கோஷங்களை எழுப்பினர். இதில் கல்லூரி மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்