அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்லில் அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அங்கன்வாடி மையங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பாமல், கூடுதல் பொறுப்பு என்கிற பெயரில் பணிசுமையை அதிகரிக்க கூடாது. செயல்படாத செல்போன்களை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் நேற்று நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணை தலைவர் ஜெயக்கொடி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பாண்டிமா, செயலாளர் பிரேமா, பொருளாளர் கலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் வேலுசாமி கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பிறத்துறை பணிகளை செய்ய சொல்லி வற்புறுத்த கூடாது. மதுரை சிம்மக்கல் அங்கன்வாடி ஊழியர் அம்சவல்லி சாவுக்கு காரணமான நபர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுத்து, கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.