மறுகட்டுமான திட்டத்தின்கீழ் பழைய அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்கும் பணி

மறுகட்டுமான திட்டத்தின்கீழ் பழைய அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்கும் பணியை தலைமைச் செயலாளர் இறையன்பு நேற்று ஆய்வு செய்தார்.

Update: 2023-04-23 22:30 GMT

அடுக்குமாடி குடியிருப்புகள் இடிப்பு

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் மறுகட்டுமான திட்டத்தின்கீழ் சென்னை மந்தைவெளி ஆண்டிமனியம் தோட்டம் திட்டப்பகுதியில் 480 பழைய அடுக்குமாடி குடியிருப்புகள் இடிக்கப்பட்டு வருகின்றன. வன்னியபுரம் திட்டப்பகுதியில் 192 பழைய அடுக்குமாடி குடியிருப்புகள் முழுவதுமாக இடிக்கப்பட்டு, புதிதாக 216 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. நாட்டான் தோட்டம் திட்டப்பகுதியில் 266 பழைய அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் இடிக்கப்பட உள்ளன.

இந்தப் பணிகளை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், பழைய குடியிருப்புகளை பாதுகாப்பான முறையில் இடித்து புதிய குடியிருப்புகளுக்கான கட்டுமான பணிகளை விரைவில் தொடங்கி பயனாளிகளுக்கு ஒப்படைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் அவர், பெரும்பாக்கம் திட்டப்பகுதி 5-ல் ரூ.31.42 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் 256 அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

அதைத் தொடர்ந்து பெரும்பாக்கம் திட்டப்பகுதி-1 மற்றும் முன்மாதிரி திட்டப்பகுதி குடியிருப்போர் நலச் சங்கங்களின் பிரதிநிதிகளை சந்தித்துப் பேசினார்.

மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடல்

மேலும் தலைமைச்செயலாளர் இறையன்பு பெரும்பாக்கத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ-மாணவிகளை சந்தித்து கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:-

இக்கல்லூரியில் பயிலும் பொரும்பாலானோர் முதல் தலைமுறை பட்டதாரிகள் என்பதை அறிந்து நான் பெருமைப்படுகிறேன். நாம் முன்னேறி உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற நோக்கத்துக்காக மட்டுமல்லாமல், நம்மைப் போல் கஷ்டப்படும் மக்களையும் உயர்த்த வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு கல்வி கற்க வேண்டும். அரசு பள்ளிகளில் பயின்ற பெண்கள் உயர்கல்வியை தொடர்வதற்காக புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாதந்தோறும் தமிழக அரசு ரூ.1,000 வழங்கி வருகிறது. இதை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் அவர், தோழமை மற்றும் சுமைதாங்கி தொண்டு நிறுவனங்கள் சார்பில் 10 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.1 லட்சத்து 81 ஆயிரத்து 500-க்கான காசோலையை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் கோவிந்த ராவ், செங்கல்பட்டு கலெக்டர் ராகுல் நாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்