குழாய் உடைப்பால் சாலையில் வீணாகி வரும் குடிநீர்
உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி நகர் பகுதியில் குழாய் உடைப்பு காரணமாக அதிகளவு குடிநீர் வெளியேறி சாலையில் தேங்கிவருகிறது.
உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி நகர் பகுதியில் குழாய் உடைப்பு காரணமாக அதிகளவு குடிநீர் வெளியேறி சாலையில் தேங்கிவருகிறது.உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி நகர் பகுதியில் குழாய் உடைப்பு காரணமாக அதிகளவு குடிநீர் வெளியேறி சாலையில் தேங்கிவருகிறது.
குழாய் உடைப்பு
உடுமலையை அடுத்த திருமூர்த்தி அணையின் மூலமாக தளி கால்வாயை ஆதாரமாகக் கொண்டு சுற்றுப்புற கிராமங்கள் பயன்பெறும் வகையில் கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி நீரேற்று நிலையங்களில் இருந்து குழாய் அமைக்கப்பட்டு நாள்தோறும் கிராமங்களுக்கு தண்ணீர் வினியோகம் நடைபெற்று வருகிறது. ஆனால் குடிநீர் குழாய்களில் ஏற்படுகின்ற உடைப்பை சீரமைப்பதற்கு அதிகாரிகள் முன் வருவதில்லை.
இதனால் உடைப்பின் வழியாக ஏராளமான தண்ணீர் வெளியேறி கழிவுநீர் கால்வாய் மற்றும் சாலை ஓரங்களில் தேங்கி வருவது வாடிக்கையாக உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் சீரான அளவில் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.
வீணாகும் தண்ணீரால் வேதனை
அந்த வகையில் திருமூர்த்தி நகர் அருகே உடுமலை-திருமூர்த்திமலை பிரதான சாலையின் வளைவு பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல மாதங்களாக தண்ணீர் வீணாகி வருகிறது. அந்த வழியாக செல்கின்ற அதிகாரிகளும் அதை பற்றி கண்டு கொள்வதில்லை. மேலும் சாலையில் தண்ணீர் தேங்கி வருவதால் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. அத்துடன் சாலையும் சேதம் அடைந்து வருகிறது.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்து விட்ட நிலையில் திருமூர்த்தி அணை குறைந்தபட்ச நீர் இருப்புக்கே தள்ளாடி வருகிறது. மேலும் வெப்பத்தின் தாக்குதலால் கிராமப்புறங்களிலும் தண்ணீர் தேவை அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் ஒவ்வொரு சொட்டு தண்ணீரையும் பாதுகாத்து பொதுமக்களுக்கு அளிக்க வேண்டிய அதிகாரிகள் தண்ணீர் வீணாவதை கண்டு கொள்ளாதது வேதனை அளிக்கிறது.
நடவடிக்கை எடுக்க கோரிக்கை
இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு பொதுமக்கள் போராட வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். உடைப்பு ஏற்பட்டால் ஓரிரு நாட்களில் அதை கண்காணித்து சீரமைக்க தவறி விடுவது ஏன் என்பதும் புரியவில்லை. எனவே திருமூர்த்திநகர் அருகே குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைத்து சீரான முறையில் பொதுமக்களுக்கு குடிதண்ணீர் வழங்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டியது அவசியமாக உள்ளது.